இரா. சம்பந்தன் அவர்களது மறைவுக்கு வடக்கு ஆளுநர் இரங்கல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன்.
சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம்  தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் அவர்கள் காணப்படுகின்றார்.
இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் நன்மைக் கருதி அன்னார் செயற்பட்டார் என்றால்  மிகையாகாது. இத்தகைய ஒரு பெரும் தலைவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அன்னாரின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்துகொண்டிருந்த குரல் இன்று மௌனித்துள்ளது. காலம் சென்ற திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் பிரிவால் மீளாத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,ஆளுநர்,
வடக்கு மாகாணம்.

Recommended For You

About the Author: Editor Elukainews