பாராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன் சம்மந்தன் அவர்களுக்கு இரங்கல்…!

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சம்பந்தன் அவர்கள்,  தந்தை செல்வா அவர்கள் முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த  ஒரு தலைவராக திகழ்ந்தவர்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் வாய்ப்புகள்   பல தடவைகள் தந்தை செல்வா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றபோதும்  அவற்றைத் தவிர்த்து  வந்த அதேநேரம்,  தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட அறவழிப் போராட்டங்கள் பலவற்றிலும் முன்னின்று போராடியிருந்தார்.
1961 ஆம் ஆண்டில் எனது தந்தையார் உள்ளிட்ட பல தமிழரசுக்கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன்,  தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திலேயே  சம்பந்தன் அவர்களுடன்  இணைந்து செயற்படும் வாய்ப்பு முதல் முதலாக எனக்கு கிடைத்தது. எனது தந்தையாருடன்  அவருக்கிருந்த  பலமான நட்புறவு  காரணமாக எனக்கும் அவருக்குமான உறவு அன்றைய நாள் தொட்டு சிறப்பானதாகவே  அமைந்திருந்தது.
ஆயுதப் போராட்ட அமைப்புகளாக எமது போராட்டப் பாதை மாறுபட்ட  தடத்தில் சென்றபோதும் கூட  அவருடனான  நட்புறவு என்றும் தொடர்ந்திருந்தது.
1985 ஆம் ஆண்டு பூட்டான் தேசத்து திம்பு நகரில் தமிழ் அமைப்புகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும்  இடையே நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தையின் போது, இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களில் வெளிப்படுத்த வேண்டிய ஆளுமை நிறைந்த அணுகுமுறைகள்  பற்றி அவரிடம் இருந்து  பல்வேறு  ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
அத்தகைய அவரது திறமை மற்றும் பண்பு, பின்வந்த காலங்களில்,  குறிப்பாக யுத்தத்தின் பின்னர் தமிழ்ச் சமூகத்தின்  குரலாக,  தென்னிலங்கை சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர் அங்கீகாரம் பெற காரணமாயின.
தான் வரிந்து கொண்ட கொள்கைக்காக, எதிரிகளும்  நிராகரிக்க முடியாத வகையில்,  ஆணித்தரமாக ஆளுமை நிறைந்த வகையில் வாதங்களை முன்வைப்பதற்கு  அவர் என்றைக்கும் தயக்கம் காட்டியதில்லை. சக நாடாளுமன்ற உறுப்பினராக  பல தடவைகளில் நான் அதனை கண்டுணர்ந்திருக்கிறேன்.
பொது வெளியிலும்,  ஊடகங்களுடனான செவ்விகளிலும் கருத்துகளை வெளிப்படுத்தும்போது,  நிதானமான அவருடைய சொல்லாடல்கள் மற்றும் கருத்துப் பகிர்வுகள், அரசியல் பரப்பில் இயங்குகின்ற  அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முன்னுதாரணமான பண்பாகும்.
எவருடனும் சரி, எக்காலத்திலும் சரி,  பேச்சுக்களை  முன்னெடுக்கும்போது, பேச்சுக்கள்  முடிவுக்கு அல்லது முறிவுக்கு  வரும்வரை நம்பிக்கையுடன்  பயணிப்பதே தலைமைத்துவத்தின் பண்பாக இருக்க வேண்டும் எனக்கூறி,  அதனை உறுதியாக கடைப்பிடித்ததன் காரணமாக பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்.
தனது வாழ்வின் இறுதிவரை, தந்தை செல்வா முன்மொழிந்த சமஷ்டித் தீர்வுக் கொள்கையில்  பற்றுக்கொண்டு,  பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைப் பெற முயற்சித்த சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழினத்திற்கும் தேசிய இனப் பிரச்சினை இந்த நாட்டில் இன்னமும் உண்டு என நம்புகின்ற சிங்கள முஸ்லீம் சமூக சக்திகளுக்கும் கவலையை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுவிட்ட வேளையில், அதன் பிளவை தடுக்க முடியாதா எனும் கவலையுடனும் காணப்பட்ட அவர்,  கட்சிக்குள் தனக்கிருந்த அதிகாரங்களைக் கொண்டு அவசியமான கருமங்களை ஆற்றி, முன்னமே கூட்டமைப்பின் முரண்பாடுகளை சீர் செய்து பிளவினைத் தடுக்கத்  தவறியிருந்தமை அவரது நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் காலங்களை கறைபடிந்ததாக்கி விட்டமை துயர் தரும் விடயமாகியுள்ளது.
அவரது நீண்டகால வாழ்வின் அடிப்படையான அரசியல் அபிலாசைகள்,  கனவுகள் மெய்ப்பட வேண்டுமெனில்,  அதற்கான பயணத்தில்,  சக தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பயணிக்க அவர் வழி நடாத்திய தமிழரசுக் கட்சிஇ இன்று தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்வருவதே அவருக்கான ஆழமான அஞ்சலியாக இருக்க முடியும்.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள்,  ஆதரவாளர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.உ.,
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
01.07.2024

Recommended For You

About the Author: Editor Elukainews