
சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்) உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து அண்மையில் அகாலமடைந்த திரு சம்பந்தன் பற்றி நான் கூறினால் அனேகர் ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள்.
எனக்கும் சம்பந்தனுக்கும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் உறவு இருந்தது. ஒன்றாக நாங்கள் வேலை செய்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் அவரும் இணைந்து கொண்டார்.
தந்தை செல்வாவிற்கு பெரிதும் மதிப்பு கொடுத்து வந்தவர். தந்தை செல்வாவின் இலட்சியத்தில்தான் போராடுவேன் என்று கூறிவந்தார். இதை யாரும் மறுக்க முடியாது. நானும் அதை உறுதிப்படுத்துகிறேன்.
இந்த இனத்தினுடைய நன்மை கருதி திருவாளர் சம்பந்தன் பல விடயங்களை செய்தார். எனக்கும் அவருக்கும் இடையில் 2004ம் ஆண்டு தராகி உள்ளிட்டோரின் முயற்சிக்கு இவரும் முழுமையாக ஒத்துழைத்தார்.
என்னைப் பொறுத்த வகையில் சம்பந்தன் நல்ல அரசியல்வாதி. நல்ல எழுத்தாளன். இவரது முயற்சியால் இனப்பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது.
எனக்கும் சம்பந்தனுக்கும் வயதில் 3 மாதமே வித்தியாசம். அவரது மரணச் மரணச் செய்தி எனது கால முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
எனவே இனியும் நாங்கள் ஏமாற முடியாது. அனைவரும் இணைந்து தமிழர் இனப் பிரச்சினைக்கு முடிவு காணுவோம். இந்த நாட்டு மக்கள் அதற்கு தயாராக இருக்கின்றாகள்.
சம்பந்தன் அவர்கள் எத்தனையோ தியாகங்கள் செய்து அவரது முயற்சி பலனற்று போனமை கவலை. மிக விரைவில் நான் உயிருடன் இருக்கும்வரை தந்தை செல்வாவின் கட்சியில் உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் பயணிப்போம். அந்த ஆவலான நாள் மிக விரைவில் வரும் என நம்புகிறேன்.
அவர் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது. சம்பந்தனின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு வேறு சக்திகள் இடம் கொடுக்கவில்லை. அவர் பிரிவினால் துயருற்றுள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என்றார்.