பொதுமக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை மறுதலிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதை அனுமதிக்கவே முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரட்ண தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் உயர்நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தையும் நாம் வன்மையாக கண்டிப்பதுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்வதற்காக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில், உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு கோரும் மனுவுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஆஜராகவுள்ளது.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்திடம் தன்னுடைய பதவிக்காலம் தொடர்பில் வினவியபோது உயர்நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் என்றே அறிவித்துள்ளது.
ஆகவே உயர்நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட விடயத்தினை மீள கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றார்