
மணல் மண்ணை ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த ரிப்பர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.



குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடமுருட்டி பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ரிப்பர் வாகனத்தை மறித்து சோதனையிட பொலிசார் முயற்சித்தனர். நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து பொலிசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்ப் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.