வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது செய்ய தவறியதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்
இறுதியாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் கடற்படை தளபதிக்கும் மீனவர்களுக்கும் இடையில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது
குறித்த கலந்துரையாடலில் மீனவர்களை முறைப்பாடு செய்ய வேண்டாமெனவும், கடற்படைக்கு அழைப்பெடுக்க வேண்டாமெனவும் கூறிய அதிகாரி தாம் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்வதாக கூறினார்
ஆனால் தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து படகுகள் சட்டவிரோத தொழிலுக்கு செல்வதாகவும் அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு மீன்களுடன் வருவதாகவும் தங்கரூபன் தெரிவித்துள்ளார்
நேற்று காலை ஆயிரக்கணக்கான மீன்களை சட்டவிரோத தொழிலாளர்கள் கரைக்கு கொண்டுவர முடியாமல் நடுக்கடலில் கொட்டி விட்டு வந்ததை சக மீனவர்கள் அவதானித்து தன்னிடம் முறைப்பாடு தெரிவித்ததாகவும் தெரிவித்த அவர்
விடயத்தை தெரியப்படுத்துவதற்காக பலமுறை கடற்படையினரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
சட்டவிரோத தொழிலாளர்களால் வருமானமற்று வீதிக்கு வந்துள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்கள் விரைவில் பட்டினியால் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் எனவும் மீனவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தொழிலாளர்களை கடற்படையினர்தான் ஊக்குவிக்கிறார்கள் என்ற கேள்வி அவர்களை கடற்படையினர் கைது செய்யாத போதே புலப்படுவதாகவும் கடற்தொழில் அமைச்சரால் இதுவரைக்கும் தமக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியவில்லையே என்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.