இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக 6,7 மாதங்களுக்கு முன்னர் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை நடாத்தி ஒரு முடிவினை எடுத்திருந்தோம்.
அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்கு பொது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக கைச்சாத்திடப்படவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்கின்ற நிலைகள் ஏற்படும் வரை, தமிழ் சிவில் சமூகம் அத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்கக்கூடிய கட்சிகள் தொடர்ந்து பயணித்து தமிழ் மக்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளுடைய முதற்கட்டமாக தான் இன்றைய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது காணப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படுகின்ற போது எமது பொது வேட்பாளர் யார் என்று விடையத்தனையும் நாங்கள் அறிவிப்போம். அந்த வேட்பாளர் அரசியல் சார்ந்தவராகவும் இருக்கலாம், அரசியல் சாராதவராகவும் இருக்கலாம். அவர் மக்கள் மத்தியில் வாக்குகளை பெறக்கூடிய ஒருவராக இருந்தால் சிறப்பாக இருக்காம் என சொல்லப்படுகிறது.
எல்லோரும் இணைந்து நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்போது, நிச்சயமாக வடக்குக் கிழக்கில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். அதனுடைய முக்கியமான நோக்கம் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு உந்துதலை கொடுப்பதற்கும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும் தீர்க்கப்படவில்லை. அது மறந்து போகக்கூடிய ஒரு பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கின்றது. இது ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இங்குள்ள பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்க்கப்படாது என்பதை வெளி உலகிற்கும், இலங்கை அரசாங்கம் அல்லது சிங்கள அரசுக்கு வெளிப்படுத்தும் முகமாக நாங்கள் இந்த தேர்தலை கையாள வேண்டுமென முயற்சித்திருக்கிறோம்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரச்சாரத்திற்கான குழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்குவதற்கான குழு என்பவற்றுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்வேறுபட்ட குழுக்கள் நியமிக்கப்படும்.
வடக்கு கிழக்கு மாத்திரமில்லாமல் தமிழ் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற அனைத்து பிரதேசங்களிலும் இது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.