தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை புரிந்துணர்வு ஒப்பந்தம், முழுமையான விபரம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை சரியாக 12:00. மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு.
ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய
உரிமையைக் கொண்டவர்கள். அதனடிப்படையிலும், பன்னாட்டுச் சட்டங்களின்
அடிப்படையிலும், உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள்.
நீண்ட வரலாற்றையும், மிகச் செழிப்பான பண்பாட்டையும், கொண்ட தமிழ் மக்களின்
தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும்,
பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கைத்தீவில்
இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

வருகின்றன.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தீவிரவாதமாகவும்
பிரிவினைவாதமாகவும், பயங்கரவாதமாகவும், சித்தரிக்கப்பட்டுவருகின்றது.
ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசிய இனமாக இருப்பதும், கேந்திர முக்கியத்துவம்
மிக்க புவிசார் அமைவிடத்தை வாழ்விடமாகக் கொண்டிருப்பதும், அவர்களது பிரதான அரசியல் பலமாகும் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டம் முதலில் பிராந்தியமயப்பட்டது. பின்னர் அனைத்துலகமயப்பட்டது.
நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் காட்டி
வந்திருக்கின்ற கரிசனைகளைச் சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் பொருட்படுத்தவும்
இல்லை, ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவுமில்லை. அதேநேரத்தில்,
முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின்  தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களிற்கு சமஉரிமையை
வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வுகளைக்கூட இதுவரை காலமும் முன்னெடுக்கவில்லை.
இனப்படுகொலைக்கு எதிரான நீதியுமின்றி, அரசியல் தீர்வுமின்றி, ஒன்றுபட்ட அரசியல்
தலைமைத்துவமும் இன்றி பாரபட்சங்களும், அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும்,
ஆக்கிரமிப்புக்களும், அழிப்புகளும், பிரித்தாளும் தந்திரங்களும்,
அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசியல், பொருளாதார, இராணுவச் சூழலில் தமிழ் மக்களின் தேசிய இருப்பு கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.
இவ்வாறான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இதுகாலவரையிலான
அனுபவங்களின் அடிப்படையிலும், சிறீலங்காவின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும்,
அவசியமும் எழுந்திருக்கின்றது. இந்த யதார்த்தத்தின் பின்னணியில், தமிழ்த் தேசத்தின்
மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு, எதிர்வரும் சிறீலங்காவின்
அரசுத்தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று, தமிழ்  தேசியக் கட்சிகளும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன்,  இதனைச் செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில், பொதுக் கட்டமைப்பு ஒன்றை
உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவைக் கொண்டுள்ளன.
இதன்பிரகாரம் இவ்வுடன்படிக்கையின் சம தரப்புக்கள் என்னும் வகையில், தமிழ்த் தேசிய
கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவை பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு
ஒன்றினை ஏற்படுத்திக்கொள்கின்றன.
1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின்
இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு “தமிழ்த் தேசியப்
பொதுக்கட்டமைப்பு” என அழைக்கப்படும்.
2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப்
பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை, சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ்  மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில்
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.
3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத்
தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான
விடயங்கள், பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான
செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக்  குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.
4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நிறுத்தும்
நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும்,  தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.
5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும்
தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல்
வேண்டும்.
6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத்
தெரிந்தெடுக்கப்படுபவருடனும்,  அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும், அந்தக்
கட்சியுடனும், அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே,
நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும்,
ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப்
பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், இதற்கான வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம்
காணப்படுகின்றது.
8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து
பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம்
காணப்படுகின்றது.
9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும்
குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக்
கொள்கின்றனர்.
இப்புரிந்துணர்வு உடன்படிக்கையானது தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே 2024 ஆம் ஆண்டு, யூலை மாதம் 22 ஆம் திகதியன்று
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்படுகின்றது.
இதில்
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சார்பில் தமிழீழ வீடுதலை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழீழ விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர்  நல்லதம்பி சிறீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்,  ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் சமூக, அரசியல் செயற்பாட்டாளர் த.வசந்தராஜா அரசியல், சமூக செயற்பாட்டாளர். சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், பொருளாதார, சமூக ஆய்வாளர் செல்வின் இரேனியஸ்,
அரசியல், சமூக செயற்பாட்டாளர் இராசலிங்கம் விக்னேஸ்வரன்
அரசியல் விமர்சகர்களான  ஏ.ஜதீந்திரா, .ம.நிலாந்தன் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர். இது இலங்கை தீவில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் ஒரு வரலாற்று முக்கியத்துவமான செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews