முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து அஞ்சலிக்க முடியாத தென்னிலங்கை தலைவர்களை எவ்வாறு #தமிழ் மக்கள் நம்புவது என அரசியல் விமர்சகர் நிலாந்தன் கேள்வி எழுப்பினார்.
நேற்று திங்கட்கிழமை யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் இணைந்து கையெழுத்திட்ட தமிழ் தேசிய பொது கட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் #ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் இணைந்து தமது பூரண ஆதரவை வழங்கி வருகின்றன.
தமிழ் பொது வேட்பாளர் ஏன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நிறுவுவதற்கு வலுவான பல காரணங்கள் இருக்கின்றன.
இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றுக் காசோலைகளாக தென்னிலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் நம்பியவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் அதன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு தமிழ் பொது வேட்பாளரை கணிசமான வாக்குகளை பெற வைக்க வேண்டும்.
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைத்தார்கள் அவர்களால் இலங்கையில இடம் பெற்றது இனப்படுகொலை தான் என கூற முடியவில்லை.
அதுமட்டுமல்லாது முள்ளிவாய்க்காலில் ஒரு பூவை கூட வைத்து அஞ்சலிப்பதற்கு தென் இலங்கைத் தலைவர்களால் முடியவில்லை.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் மனங்களில் புதிய புதிய சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை பொது வேட்பாளர் ஒருவரால் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் திரட்சி புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பை முன்னோக்கிக் கொண்டு சென்று பொது வேட்பாளரை பலப்படுத்தும்.
பொது வேட்பாளர் வரும் வாக்கின் அளவு எதற்காக வாக்களித்திருக்கிறார்கள் என்ற செய்தி தென்னிலங்கை அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைக்கும்.
நாங்கள் மீண்டும் மீண்டும் புதிய கட்ட மைப்புகளை உருவா க்குவதில் வல்லவர்கள் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பதற்கினங்க ஒரு மக்கள் கூட்டம் மீண்டும் இப்பொழுது ஒரு கட்டமைப்பை ஒரு பொதுக் கட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது..
15 வருடங்களாக கருத்தியலாக இருந்த பொதுக் கட்டமைப்பு அரசியல் கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் இணைத்து கருத்துருவாக்கம் பெற்றிருக்கின்றது.
பொதுமக்கள் #அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பு எதிர்கால தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு மக்களின் பங்களிப்பு அவசியம்.
ஆகவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அவசியமாக கருதப்படுகின்ற நிலையில் அதனை பலப்படுத்துவதற்கும் அதிகாரம் உள்ள கட்டமைப்பாக சர்வதேசத்தின் முன் பேசுவதற்குரிய ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்