சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் சில தினங்களுக்கு முன்பு வழங்கி வைக்கப்பட்டதை எதிர்த்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நண்பகல் 12மணியளவில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இருந்து பேரணியாக புறப்பட்ட சுகாதார பணியாளர்கள் பண்ணையில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு நியாயம் கோரினர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்,சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த இடத்திற்கு வரவேண்டும், நீதியை எமக்குத்
தரவேண்டும், எமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்து போன்ற கோரிக்கைகள் இதன்போது கோஷங்களாக எழுப்பினர்.
இதன்போது ,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தற்போது பொறுப்பான அதிகாரிகள் இல்லை என்றும், அதே நேரம் பிறிதொரு தினத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதமான நியமனங்களையும் தற்போது வழங்கவில்லை என்றும், மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு கூற முடியாது என்றும் அதற்கு பதில் வழங்க வேண்டியது ஆளுநரே என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்து சுகாதாரப் பணியாளர்கள் நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றி நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பொழுது எம்மை தவிர்த்து விட்டு தற்போது வந்தவர்களுக்கு நியமனத்தை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தொடர்ந்து ஏமாற்று வார்த்தைக்கு இணங்க முடியாது என்றும் உடனடியாக நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்தக் கோரியும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.