புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியல்! பலமா? பலவீனமா? அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம் 

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆரவாரம் எல்லாம் தென்னிலங்கையில் தான். வட கிழக்கிலோ , மலையகத்திலோ , முஸ்லீம் பிரதேசத்திலோ பெரிதாக எதுவும் இல்லை. தென்னிலங்கையில் கடும் போட்டி நிலவுவதால் ஆட்களை கழட்டியெடுக்கும் வேலைகளும் துரிதமாக இடம்பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க இது விடயத்தில் தனது சூரத்தனத்தை காட்டத் தொடங்கியுள்ளார். பொதுஜன முன்னணிக்குள் அவரது சூரத்தனனம் முடிந்துவிட்டது. ராஜபக்சாக்கள் வெறும் கோவணத்துடன் மட்டும் விடப்பட்டுள்ளனர். தங்களுக்கு இந்த நிலை வரும் என ராஜபக்சாக்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இறந்த தமிழ் மக்களின் ஆவி அவர்களை இடைவிடாது துரத்துகின்றதோ தெரியவில்லை. கட்சி கண்ணுக்கு முன்னால் உதிர்ந்து கொட்டிக் கொண்டு நிற்கின்றது. கவர்ச்சித் தலைமைத்துவங்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதற்கு ராஜபக்சாக்களே சான்று.
ரணிலின் கவனம் பொதுஜன முன்னணியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்பியுள்ளது. அங்கும் கழட்டக் கூடியவர்களை அவர் கழட்டப் பார்ப்பார.; சஜித் பிறேமதாசாவிற்கு கலக்கம் தொடங்கிவிட்டது. ரணில் வெற்றியடையக் கூடிய சூழல் உருவாகுமானால் ஐக்கிய மக்கள் சக்தியும் உதிரத் தொடங்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ரணில் தற்போது சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களிலேயே கவனம் செலுத்துகின்றார் ஆனாலும் அங்கு அவரது இலக்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்;களல்ல. மாறாக மலையக, முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களே! அங்கு தான் கொத்தாக வாக்குகள் கிடைக்கும். ரணில் வெற்றியடைவார் என்ற நிலை வருமானால் மலையக , முஸ்லீம் கட்சிகளும் மாறக்கூடும். தமிழ்மக்களைப் பொறுத்தவரை தனது வியூகங்களை அவர் கடைசியாகத்தான் செயற்படுத்த முனைவார். இதில் அவரது வியூகம் தனக்கான வாக்குகளை பாதுகாப்பது. சஜித்துக்கு செல்லக்கூடிய வாக்குகளை செல்ல விடாமல் தடுப்பது என்பவை தான் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், வியாளேந்திரன் வாக்குகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு சுமந்திரன் மூலம் தமிழ் தேசியப் பக்க வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்.
சுமந்திரனுக்கும் , ரணிலுக்குமிடையில் முன்னர் முரண்பாடு இருந்ததுபோல தோற்றம் தெரிந்தாலும் தற்போது சுமந்திரன் ரணிலை நெருங்க முயற்சிக்கின்றார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவாதத்தை வாங்கிக் கொண்டு மக்களை ரணிலுக்கு  வாக்களிக்கும் படி சுமந்திரன் கோரலாம.;  ஒரு மாகாண சபைத் தேர்தலுக்காக மட்டும் தமிழ் மக்களை விற்பதற்கு சுமந்திரன் முனையலாம். இது மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ் மக்களுக்கு ஒரு ஜனாதிபதி தேவையா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
மறுபக்கத்தில் தமிழப்; பொது வேட்பாளர் விவகாரத்தில் இரண்டாம் கட்டம் இந்த வாரம் முடிவிற்கு வந்துவிடும். இக்கட்டுரை வெளிவரும் போது பொது வேட்பாளர் பெயரும் பகிரங்கத்திற்கு வரலாம். கிழக்கில் முக்கியஸ்தர் பலரும் வேட்பாளராக நிற்பதற்கு தயங்குகின்றனர். இதனால் வடக்கிலிருந்தே வேட்பாளர் தெரிவு செய்யப்படலாம். 3ம் கட்டம் பிரச்சாரம் தான். கட்டமைப்பு ரீதியான ஒழுங்குகளைச் சரிவரச் செய்யும் போது தான் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். இதற்கிடையே புலனாய்வுப் பிரிவின் தொல்லைகளும் ஆரம்பித்து விட்டன. சில முக்கியஸ்தர்களின் வீடுகளிற்கு அருகில் வசிப்பவர்களிடம் விசாரணையை நடாத்தியுள்ளனர். நேரடியாக சந்தித்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாறாக அருகில் இருப்பவர்களிடம் விசாரிப்பது ஒருவகையில்  எச்சரிக்கை முயற்சியே!

முன்னரும் கூறியது போல தமிழ்ப் பொது வேட்பாளரின்  பிரதான இலக்கு தேசத்தை கட்டியெழுப்புதல் தான். இதன் போது தான் புறநெருக்கடிகளும் அகநெருக்கடிகளும் இன்றியமையாதவையாகின்றன. கடந்த பல வாரங்களாக இது பற்றி ஆய்வு செய்து வந்திருக்கின்றோம். புறநெருக்கடிகளை விரிவாக பார்த்திருக்கின்றோம். அகநெருக்கடிகளில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமை , கட்சி அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியல் மாட்டுப்பட்டமை , தமிழத்; தேசிய அரசியலின் புலமைத்துவ பலமின்மை , போரின் தோல்வி ஏற்படுத்திய கூட்டு மனச் சோர்வு , கொழும்பு மேட்டுக்குடிகளின் ஊடுருவல் , அகமுரண்பாடுகள் மேலேழுதல் , கிழக்கை கையாள்வதில் ஏற்பட்ட தோல்வி என்பன பற்றி சென்ற வாரம் பார்த்திருந்தோம். இந்த வாரம் எஞ்சியவை பற்றி பார்ப்போம்.

எஞ்சியவைகளில் முதலாவது புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியலாகும். புலம்பெயர் தரப்பில் உள்ள குழுக்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை அங்கிருந்து கொண்டே செய்வது ரிமோட் அரசியலாகும். ஆரம்ப காலங்களில் இது பெரிய பயன்களைத் தந்தது என்பது உண்மைதான். இங்கே செயல்படக்கூடிய தனி நபர்கள், குழுக்களுக்கு நிதி வசதிகளை வழங்கி புலத்திலிருந்து கொண்டு அவர்கள் அரசியலை முன்னெடுத்தார்கள். 2009க்கு பின்னர்  சிறீலங்கா அரசும், அவர்களது ஊது குழலாக இருந்த சம்பந்தன் தலைமையும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுத்த போது அதனை முறியடிப்பதில் புலம்பெயர் தரப்பின் ரிமோட் அரசியலுக்கு பெரிய பாத்திரம் இருந்தது. “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போன்ற வலுவான போராட்டங்களுக்கும், காணாமல் போன உறவுகள் தொடர்ச்சியாக நடாத்தும் போராட்டங்களுக்கும் புலம்பெயர் தரப்பின் நிதி வசதிகளே காரணம் எனலாம்.

தேசிய அரசியலில் மட்டுமல்ல நிவாரண அரசியலிலும் புலம்பெயர் தரப்பின் நிதி பாரிய பாத்திரத்தை வகித்திருந்தது. சிறீலங்கா அரசும், தென்னிலங்கை கட்சிகளும், தென்னிலங்கை சார்புக் கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும் இவ்நிவாரண அரசியலைக் காட்டி தமிழ்த்; தேசிய அரசியலை நீக்கம் செய்ய முயற்சித்தன. புலம்பெயர் தரப்பும் நிவாரணங்களை அள்ளி வழங்கிய போது இவர்களுடைய தமிழ்த் தேசிய நீக்க அரசியல் பலமிழக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கை கட்சிகள் நிவாரண அரசியலை மேற்கொள்ள முடியாமல் இருந்தபோது புலம்பெயர் தரப்பின் நிவாரண அரசியல் மேல்நிலைக்கு வந்தது. இதில் புலம்பெயர் நாடுகளிலிலுள்ள ஊர்ச் சங்கங்களுக்கும் பாரிய பங்கு இருந்தது. இன்று பல கிராமங்களில் அரசின் உதவிகள் குறைந்த போது புலம்பெயர் நாட்டு ஊர்ச் சங்கங்கள் அவற்றை ஈடு செய்ததையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. பல கிராமங்களில் கல்வி, பொருளாதார பணிகளை இவையே முன்னெடுக்கின்றன. கோவில் நிர்மாணம் தொடக்கம் சனசமூகநிலைய நிர்மாணம் வரை இவர்களது பணிகள் பரந்திருந்தன.
இன்று கிராமங்களிலுள்ள பல கட்டிடங்கள் இவர்களால் எழுப்பப்பட்ட கட்டிடங்களேயாகும்.
இவ்வாறு பல நன்மைகள் கிடைத்தாலும் பல தீமைகளும் உருவாகியுள்ளன என்பதை நாம் நிராகரிக்க முடியாது. அதில் முதலாவது தங்கியிருத்தல் அரசியல் உருவானமையாகும். அதாவது புலம்பெயர் தரப்பு நிதி வழங்கினால் அரசியலைச் செய்வது அல்லது விட்டு விடுவது என்ற போக்கு வளரத் தொடங்கியது. இதனால் பல நிறுவனங்கள் சில வருடங்களிலேயே செயலிழந்ததை அவதானிக்க முடியும். முன்னர் ஒரு அரசியல் நிறுவனத்தை நடாத்துவது என்றால்  உள்ளூர் மட்டத்திலேயே அதற்கான நிதி கஸ்ரப்பட்டு சேகரிக்கப்படும். தற்போது எல்லாவற்றிற்கும் வெளியிலிருந்து எதிர்பார்க்கின்ற நிலை தோன்றியுள்ளது. இது செயல்பாட்டாளர்களை சோம்பேறியாக்கி விடுகின்றது. மறு பக்கத்தில் மக்கள் பங்கேற்பு அரசியலையும் பலவீனப்படுத்தி விடுகின்றது.
அரசியலைத் தவிர்த்து கிராமங்களைப் பார்க்கும் போது அங்கும் இதே நிலைதான். சனசமூகநிலையத்திற்கு பத்திரிகை போடுவதற்கும் நிர்வாகக் கூட்டங்களில் தேநீர், சிற்றுண்டி பரிமாறுவதற்கும் வெளியிலிருந்து நிதியை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. வீடுகளிலிருந்து பரிமாறுவதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும் நிலையும் தோன்றியுள்ளது. இது மக்களின் கூட்டுச் செயற்பாடுகளையும் பலவீனமாக்கியுள்ளது. மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான  நெருக்கத்தையும்.
வெளியிலிருந்து நிதி வருகின்றதனால் உள்ளூரில் நிதி சேகரிக்கும் முயற்சி முற்றாக கைவிடப்பட்டது. முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு போராட்டம் நடாத்துவது என்றால் மாணவர்கள் வீதி வீதியாக கடைகளுக்கு சென்று நிதி சேகரிப்பார்கள். கிராமங்களிலும் நிதி சேகரிப்பார்கள். தற்போது அது அருகி விட்டது.
இரண்டாவது புலம்பெயர் தரப்பு இங்குள்ள சூழலுக்கு ஏற்ப அரசியலை முன்னெடுக்காமல் தங்களது விருப்பங்களை திணிக்கின்ற முயற்சி இடம்பெறுகின்றது. அது சூழலுக்கு பொருந்தாத போது அரசியல் முன்னெடுப்புகளும் பலவீனமாகிவிடுகின்றது. பொதுவாக புலம்பெயர் தரப்பு பரபரப்பு விடயங்களுக்கு நிதிகளை வழங்குகின்றதே தவிர அடிப்படை கட்டுமான விடயங்களில் அக்கறை செலுத்துவதில்லை.
இதனால் பரபரப்பு நிகழ்வுகளின் விளைச்சலை அறுவடை செய்ய முடியாத நிலையும் தொடர்ச்சியைப் பேண முடியாத நிலையும் ஏற்படுகின்றது.
மூன்றாவது எஜமான் , சேவகன் உறவை இந்த ரிமோட் அரசியல் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றமையாகும். நிதி தருபவன் எஜமான். பணி புரிபவன் சேவகன் என்ற நிலையே இங்கு வளர்கின்றது. பரஸ்பர பங்காளர் என்ற நிலை வளர முடியவில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் புலம் பெயர் தரப்பு  தங்களை கூலியாட்களாக நினைக்க பார்க்கின்றது என நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தனர். உண்மையில் இந்த போக்குத்தான் இங்கு அரசியல் தேக்கநிலை உருவாகுவதற்கும் காரணமாகியது. இங்கே பல பொது அமைப்புக்கள் கூடி தீர்மானம் எடுக்கும் போது கால அவகாசம் கேட்கின்றன. இந்த கால அவகாசம் ரிமோட் தரப்பின் சம்மதத்தை பெறுவதற்காகத்தான்.
எஞ்சிய அக முரண்பாடுகளில் இரண்டாவது புலம் – நிலம் அரசியல் இடைவெளி ஏற்பட்டுள்ளமையாகும். புலத்தில் தற்போதும் தமிழீழத்திற்கான அரசியல்  முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான அரசியலை இங்கு முன்னெடுக்க முடியாது. தனிநாட்டு அரசியலை முன்னெடுக்க 6வது திருத்தச் சட்டம் தடையாக உள்ளது. புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதனால் இங்கு அதன் பெயரில் எதுவும் செய்ய முடியாது. புலம்பெயர் அரசியல் தரப்போடு தொடர்பு வைத்திருந்தால் கூட விசாரணைக்கு உட்படுத்தும் நிலை காணப்படுகின்றது. ஆறுதிருமுருகன் முன்னெடுக்கின்ற திருப்பணிகளை கூட புலிகளின் பணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது என புலனாய்வு பிரிவினர் குற்றம் சாட்ட முயற்சித்தனர். தாயகத்தில் மக்களின் நிலை என்பது திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் இருக்கின்ற நிலைதான.

நிலமும், புலமும் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுக்கும் போது சர்வதேசப் பரப்பில் வீச்சுடன் முன்னேற முடியும். இங்கே இரண்டு தரப்பும் இpணைந்து செயல்படக்கூடிய பொறிமுறையைக் கண்டு பிடிப்பது அவசியமானது. சுயாதீனமாக செயல்படக்கூடிய புலம்பெயர் தரப்புக்கு தடை போடுவது  நல்ல தல்ல என்ற விமர்சனமும் உள்ளது. இதனையும் நிராகரிக்க முடியாது.
இவற்றை விட அடிப்படை சக்திகள் , சேமிப்பு சக்திகள், நட்பு சக்திகள் இடையே ஒருங்கிணைவு அரசியல் வளராமையும் முக்கிய அகநெருக்கடியாக உள்ளது. இங்கு அடிப்படைச் சக்திகள் என்போர் தாயகத்தில் வாழும் மக்களும் அதன் நீட்சியாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் ஆவர். சேமிப்புச் சக்திகள் என்போர் மலையகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் உட்பட உலகெங்கும் வாழும் உலகத் தமிழர்கள் ஆவர். நட்பு சக்திகள் என்போர் சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர். நிலம் , புலம் , தமிழகத்திற்கிடையே ஒருங்கிணைவு அரசியலை கட்டியெழுப்பாமல் இதனை முன்னே கொண்டு செல்ல முடியாது.

எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருக்கின்ற தமிழ் மக்கள் தனது புறரீதியான ஆற்றலை கட்டியெழுப்பாமல் தீர்வு நோக்கிய செல் நெறியில் அசைவுகளை ஏற்படுத்த முடியாது. தவிர உலகம் தழுவிய வகையில் தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாளக்கூடிய தேசிய அரசியல் பேரியக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது.

Recommended For You

About the Author: Editor Elukainews