
தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்கள் யுத்தத்தினால் நீண்டகால பாதிப்புகளை உணர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலத்துக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை கனடா தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசாரணைகளுக்கும் கனடா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
கனடா நாட்டின் ரெறண்டோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகள் பாரியளவில் நடைபெறவில்லை .
ஆகவே கனடா அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்படும் நிலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தமது பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் இ.ஜேசீலன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்