யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை 17.08.2024 இடம்பெற்றது.
பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில் உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது
விருந்தினர்கள் நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் இறுதி போட்டி ஆரம்பமானது.
வடமாகாணத்தின் பலம் வாய்ந்த அணிகளான கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்தி அணி மோதியது
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற முதல் பாதி ஆட்டத்தில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி ஒரு கோலினை போட ஆட்டம் மேலும் சூடுபிடித்தது
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் போட இரு அணிகளும் முயற்சித்த போதும் அது பலனளிக்காமல் போக ஆட்டத்தின் முடிவில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி பாரதி வடமாகாண வெற்றிக்கிண்ணத்தை 1 க்கு 0 எனும் கோல் கணக்கில் வெற்றியை தமதாக்கியது.
முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த அணிகளுக்கு வெற்றிக்கேடயம், பணப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் புலமைபரிசிலில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் நினைவு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறித்த இறுதி போட்டியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன், உடுத்துறை மகாவித்தியாலய அதிபர், கிராமசேவகர், வடமராட்சிகிழக்கு உதைபந்தாட்ட தலைவர், வடமராட்சி கிழக்கு நடுவர்சங்க தலைவர், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர், மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.