
சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த நபர் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவர் காணாமல் போன தினத்துக்கு முதல்நாள் அவரது நண்பர் அவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் விட்டதாக தெரிவிக்கின்றார்.
அவரது வீட்டில் சிசிடிவி கேமராவின் தேக்கவியல் (server) சாதனமும் காணாமல் போயுள்ளது. அவரது தலைக்கவசம் உடைந்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் காணாமல் போனதாக தெரியவில்லை என அவரது நண்பர் குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில் இது குறித்து அவரது நண்பர் 2024.08.24 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.