கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இதனைவிட புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது பல பகுதிகள் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அனுமதிக்கப்படாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல் விற்பனை நிலையங்களை தடை செய்யப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது அத்துடன் கிளிநொச்சி குளத்தினை எல்லையிடுவதற்கான நடவடிக்கைகளையும் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது