இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அவர் இவ்வாறு மாறி, மாறிப் பேசி தமிழ்த் தேசியத்தை அழிக்கிறாரோ தெரியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான சுப்பையா என்ற முதியவர் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவில் இடம்பெற இருக்கின்ற 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வடக்கு ,கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாழும் தமிழ் மக்களிடம் உரிமை பத்திரிகை பிராந்திய செய்தியாளர்கள் அனுசரையோடு, தொலைபேசி மூலமாக நடத்திவரும் கருத்தறியும் கலந்துரையாடலின் போதே தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான சுப்பையா என்ற முதியவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த முதியவர் மேலும் கூறுகையில்.
தம்பி சாணக்கியன் அவர்கள் கடந்த காலங்களிலே பலவிடயங்களைப் பேசியுள்ளார். குறிப்பாக கடந்த வருடம் மட்டக்களப்பு துறைநீலாவணையில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம் என்று இலங்கை அரசு பற்றி அவர் பேசினார். ஆனால் தற்போது அவர் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ந்து கருத்துக்களை அவர் கூறிவருவதோடு, மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியினரையும் தனது முடிவுக்கு ஆதரவாக அவர் திசைதிருப்பி வருகிறார்
ஏன் அவர் இவ்வாறு ஒரு மனநோயாளிபோல முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறாரோ தெரியவில்லை?
ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினர் சாணக்கியனின் தவறான முடிவுக்கு பின்னால் இழுப்பட்டு சிங்கள வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும். அல்லது கட்சியினர் துரோகம் செய்யாமல் ஒதுங்கியாவது இருக்க வேண்டும் என்று அந்த முதியவர் கடும் விசனத்தோடு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறும் போது, தம்பி சுமந்திரன் வழியிலே சிங்கள வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்காக எங்கட சின்னவர் சாணக்கியனும் தீவிரமாக செயற்படுகிறார். தம்பி சாணக்கியன் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மூன்று மொழிகளிலும் இலங்கை நாடாளுமன்றத்தில கொஞ்சப் பேச்சா பேசினார். ஆனால் இப்போது தான் பேசிய அனைத்து விடயங்களையும் மறந்து விட்டு சுமந்திரனின் அறிவிற்கு பின்னால் நின்றுகொண்டு சிங்கள வேட்பாளருக்கு ஆதரவாக அதுவும் எங்களுடைய மாவட்டத்திலிருந்து தமிழ்ப் பொது வேட்பளராக போட்டியிடும் தம்பி அரியநேந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அவர் பிரசாரம் செய்துவருகிறார்.
இந்த சுமந்திரனையும், சாணக்கியனையும் எமது மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திருந்தால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இவர்கள் தற்போது சிங்களவர்களுக்கு வாக்கு போடவேண்டும் என்று பிரசாரங்களை செய்யமாட்டார்கள் தானே? இங்கே தான் தவறு உள்ளது எங்கட தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கொள்கையில்லாத பிழையானவர்களை கட்சியில் இணைத்தார்கள். தமிழ் மக்கள் இவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று நம்பி வாக்குப் போட்டார்கள். இதனால் வந்த வினைதான் இது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
தற்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் வெற்றி பெறுவதற்காக நிறுத்தப்படவில்லை. மாறாக சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களினால் தமிழ் மக்கள் காலம், காலமாக எவ்ளவு தூரம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதோடு, தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது தான் என்று அனைவரும் ஒன்றுபட்டு வாக்குகள் மூலம் உலகிற்கு நாம் கூற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களித்து எமது வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.