நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் பங்குபற்றாது இருக்கத் தீர்மானித்துள்ளனர். நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு பாரதூரமான செய்தியை தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கங்களை வழிநடத்தும் தமிழ்த் தாய்மார்கள் நாட்டின் ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட மாட்டாது என வலியுறுத்தியுள்ளனர்.
போரின் போதும் அதற்குப் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிய சர்வதேச ஆதரவை கோரி, இலங்கையில் நீண்டகாலப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார், ஓகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு தமிழ் சமூகத்தின் ஆதரவைக் கோரும் வகையில் ஓகஸ்ட் 27ஆம் திகதி முல்லைத்தீவிலும் மன்னாரிலும் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தினர்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ஜனாதிபதித் தேர்தல் குறித்து கேட்கும்போது ‘வெறுப்பு’ ஏற்படுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
“வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இது வரையில் ஜனாதிபதிகளிடமிருந்தோ அல்லது அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தோ எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீங்கள் கேட்கும் போது எமக்கு வெறுப்புதான் ஏற்படுகிறது.”
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதில் தலையிடமாட்டார் என தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தாம் எவ்வகையிலும் ஈடுபாடு காட்டப்போவதில்லை எனவும் வலியுறுத்தினார்.
“எங்களில் கொல்லப்பட்டவர்களையோ, கடத்திச் செல்லப்பட்டவர்களையோ, அதற்கு காரணமானவர்களை அவர்களைப் பாதுகாப்பவர் ஜனாதிபதியாவார், அப்படி முடிந்தால், இனிவரும் ஜனாதிபதி, எமக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு ஏற்றினால் அவரை நாங்கள் வரவேற்போம்.”
சிங்கள ஜனாதிபதியை நியமித்தாலும் எந்தப் பயனும் இல்லை எனவும், தனது அன்புக்குரியவர்களுக்கு சர்வதேச நீதியை கோரி வருவதாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்டத் தலைவி மனுவல் உதயச்சந்திரவும் ஓகஸ்ட் 27ஆம் திகதி மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
“வரப்போற ஜனாதிபதி ஒரு சிங்கள ஆட்சியாளராகவே இருப்பார். சிங்கள ஆட்சியாளர் வந்தாலும் காணாமல்போன இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. அதனால்தான் நாங்கள் சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம். ஆகவேதான் எந்த ஜனாதிபதி அல்லது அரசியல்வாதி வந்தாலும் யார் வந்தாலும் அதற்கு நாம் பொறுப்பில்லை. யார் வந்தாலும் வரட்டும்.”
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலையிலும்
ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர்.