தனி நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை. கடந்த வாரத்தில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி(டி.பி.எல்.எஃப்) அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா தெரிவித்தார்.
11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
இதுவரையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.