யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண தாய்மார்கள் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடுத்து நிறுத்திய பொலிஸார் தாய்மார்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்தனர்.வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தமிழ்த் தாய்மார்களின் கடும் எதிர்ப்பினால் ஒருசில மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடமாகாண போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கிழக்கு மாகாண தமிழ் தாய்மார் திருகோணமலையில் போராட்டத்தை முன்னெடுத்ததுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
திருகோணமலை நீதவான் வழங்கிய நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ‘சுமார் ஆயிரம் பேரின்’ பங்கேற்புடன் பேரணி நடத்தப்படவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்து, கிழக்கு மாகாணத்தில் தமிழ் தாய்மார்களின் எதிர்ப்பு ஊர்வலத்தை தடுக்க நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டிருந்தது.
“30.08.2024 அன்று சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய, திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் அவர்களின் பணிப்புரையின் பேரில் கீழ்க்கண்டவர்கள் தலைமையில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் கட்அவுட்டுகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தி கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது….”
ஆர்ப்பாட்டப் பேரணி செல்லும் பாதை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும், இதனால் இனங்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுமெனவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
“திருகோணமலை திருஞான சம்பந்தர் வீதி, சிவன் கோவிலுக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி இந்த ஆர்ப்பாட்ட பேரணி, துறைமுக பொலிஸ் பிரிவில் உள்ள பவர் ஹவுஸ் வீதியில் உள்ள மனித உரிமைகள் அலுவலகம் வரை சென்று அந்த இடத்தில் போராட்டம் நடத்தி அதன்பின், தபால் நிலைய வீதியில் உள்ள மாநகரசபை சுற்றுவட்டத்திற்குச் சென்று கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு அரங்கிங்குச் சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செய்வதன் மூலம் இனங்களுக்கு இடையில் கலவரம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படும் என்பதாலும், அத்துடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.”
இந்த கோரிக்கையை பரிசீலித்த திருகோணமலை நீதவான், நிலைய பொறுப்பதிகாரியால் பெயரிடப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களுக்கும் அவர்களுடன் வருபவர்களுக்கும்
எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவதன் மூலம் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமென உத்தரவிட்டார்.
“1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைக் கோவையின் 106(1) இன் கீழ் கண்டன ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்தி மோதல் ஏற்படுவதை தவிர்க்கவும் பிரிவு 106 (3) இன் கீழ் உங்களுடன் வருபவர்களுக்கு இதன் மூலம் உத்தரவிடுகிறேன்.”
அருட்தந்தை நோயல் இம்மானுவேல், இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரம் என்றழைக்கப்படும் கண்ணன், திருகோணமலை மகளிர் வலைமையப்பின் தலைவி சட்டத்தரணி மயூரன் பிரசாந்தனி, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி அமல்ராஜ், திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்டியன் தேவி, அஹம் அரச சார்பற்ற அமைப்பின் தலைவர் கண்டுமணி லவகுவ ராசா, ஊடகவியலாளர் கார்த்திக் ஹரிபிரியவன் ஆகியோருக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரட்ரிக் கோட்டை வீதி வழியாக வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு செல்ல முற்பட்டபோது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து திரும்பி கடற்கரை ஓரமாக வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு சென்று தீபச்சுடர் ஏற்றி காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் தாய்மார்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியதுடன், அவர் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் என வலியுறுத்தினர். ஒருசில மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவரை பொலிஸார் விடுவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கங்களின் தலைவிகளான மூன்று தமிழ்த் தாய்மார்களும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை நோயல் இம்மானுவேலிடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்குமாறு மகஜர் ஒன்றை கையளித்தனர்.
2017ஆம் ஆண்டு ஆண்டு பெப்ரவரி மாதம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 2749 நாளில், யாழ்ப்பாணத்தில் திரண்ட, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கற்பூரச் சட்டி ஏந்தி, ஆரியகுளம் சந்தியில் இருந்து பருத்தித்துறை வீதி, வைத்தியசாலை வீதி, காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்து பொதுச் சுடரை ஏற்றி நீதியை கோரினர்.
தமது உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு பேரணியை ஆரம்பித்து மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆசிரமத்தின் தவத்திரு வேலன் சுவாமிகளிடம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
போரின் இறுதி நாட்களில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் போன தமது உறவுகளின் கதியை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி, கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அரசாங்கம் முன்வைத்த காணாமல் போனவர்களுக்காக வழங்கப்படும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, நட்டஈட்டைப் பெறுவதற்கு தமது அன்புக்குரியவர்களை இழந்த தமிழ்த் தாய்மார்கள் பகிரங்கமாக மறுத்துவிட்டனர்.
நாட்டில் நீதி கிடைக்காத தமிழ் மக்கள் கடந்த 15 வருடங்களாக யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்னவென்பதை கண்டறிய சர்வதேச தலையீட்டை கோரி வருகின்றனர்.