
இன்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.











இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,
அறுவர் கொண்ட கும்பல் வன்முறைக்காக வந்து, இருவர் வெளியே நின்ற நிலையில் நால்வர் கொண்ட கும்பல் உள்ளே வந்து எனது 5 வயது மகளின் வயிற்றில் தாக்கினர். எனது சகோதரி பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். அத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிக்கப்பட்ட எனது சகோதரன் மீதும் தாக்குதல் நடாத்தினர். எனது மகனான சிறுவனது தொண்டையை பிடித்து திருகினர்.
இவ்வாறு அட்டகாசம் செய்ததுடன் வேலியின் தகரம் மற்றும் கதிரை என்பவற்றை உடைத்தனர். எமது மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விழுத்தினர். பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எமக்கு இந்த அநீதி இழைத்தவர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எமக்கான நீதிக்கு மேல் அதிகாரிகளை நாட வேண்டி ஏற்படும் என்றார்.