யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலை தூக்கியுள்ளதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நடவடிக்கையால் வடமராட்சி கிழக்கு கடலில் மீன்வளம் அதிகரித்து, மீன்களின் விலையும் பாரியளவு உயர்ந்து, நாகர்கோவில் தொடக்கம் வெற்றிலைக்கேணி வரையான சிறு தொழிலாளர்கள் கணிசமான வருமானத்தை ஈட்டிவந்த நிலையில் மீண்டும் சட்டவிரோத கடற்றொழில்கள் தலை தூக்கியுள்ளது.
நேற்று 06.09.2024 ஐம்பதிற்கும் மேற்பட்ட படகுகள் வெற்றிலைக்கேணி கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்குள் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதை அவதானித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் அவர்களை கைது செய்யவில்லை.
நாளாந்தம் சட்டவிரோதமான கடற்றொழில் மூலம் பல்லாயிரம் கிலோ மீன்கள் பிடிப்பதால் வடமராட்சி கிழக்கு சந்தைகளில் 230 ரூபாய்வரை காணப்பட்ட சாளை மீனின் கிலோ ஒன்றின் விலை சந்தைகளில் 30-50 ரூபாயாக காணப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்வதை நிறுத்துமாறு ஆளும் கட்சி ஒன்றின் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத தொழிலை இதுவரை நிறுத்த முடியாமல் காணப்படுவது கடற்தொழில் அமைச்சரின் முக்கிய சாதனைகளில் ஒன்றெனவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.