நாடு மிகவும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் நாட்டின் பெறுமதிவாயந்த சொத்துக்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா விரைவில் கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பு மையங்களில் தலையிடும் என்பது உறுதி என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
நீங்கள் நட்பாக இருப்பதாக நினைத்து உiயாற்றுகின்றேன். நான் நட்புடனேயே இருக்கின்றேன். ஏனெனில் நீங்கள் எனக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் அரச தலைவர். உங்களது மனதை வேதனைப்படுத்தினாலும் பரவாயில்லை. நான் நாடு மற்றும் மக்களைப் பற்றியே பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நான் உங்களை தேர்ந்தெடுத்து ஆட்சியை அமைப்பதற்கு உதவினேன். நான் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் உங்களது மனதை காயப்படுத்தியிருக்கலாம். உண்மையை எடுத்துரைப்பது மக்கள் பிரதிநிதியின் பொறுப்பாகும்.
நாட்டில் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத நிலையில் நானும் அரசியலுக்குள் பிரவேசித்தேன். அமைச்சுப் பொறுப்பை ஏற்றேன். எனது பொறுப்புகளை நான் சரிவர செய்தேன்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் உருவான சைட்டம் விடயத்தால் நாடு மூன்று வருடங்கள் செயலற்றுக் கிடந்தது. 410 ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் இடம்பெற்றன. ஒரு வாரத்துக்குள் நான் அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தேன்.
2017ஆம் ஆண்டு எனது தலைமையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வெசாக் நிகழ்வே, உலகில் நடைபெற்ற மிகப் பெரிய பௌத்த நிகழ்வாகும். இந்த நிகழ்வில் 74 நாடுகள் பங்கேற்றன. நாங்கள் சர்வதேச ரீதியில் நற்பெயரை பெற்றுக்கொண்டோம்.
யுத்த குற்றம் இழைத்தாத பேங்கிமூன் சர்வதேச நீதிமன்றத்துக்கு 2011 ஆண்டு உங்களைக்கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த சந்தர்ப்பத்தில் நான் மட்டுமே அவருக்கு சவால் விடுத்தேன். எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு அந்த சவாலை விடுத்தேன்.
உங்களது வேண்டுகோளின் பேரில் நீங்கள் நியமித்த தருஸ்மன் குழுவே, நீங்கள் போர்க்குற்றம் செய்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதற்காக மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக எனக்கு நன்றி தெரிவித்தார்.
என்னைப்போன்றே 10 இலட்சம் மக்கள் தொகையும் நாட்டில் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்துவீர்கள் என்று நம்பினர். முப்பது வருடப் போரில் வெற்றிபெற்ற 3-4 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையான மக்கள் ராஜபக்ஸவை வெறுக்கத் தொடங்கினர். நாடு துண்டுகளாக விற்பனை செய்யப்பட்டது. 16 இலட்சம் கோடிக்கு எம்மை விட்டுவிட்டார்கள். தரகு, இலஞ்சம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை முக்கிய தலைப்புகளாக மாறின. குடும்பவாதம் நாட்டை இன்னும் அழித்தது.