
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.




தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டாரகிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது. தவறு இன்றைய தினம் 10/09/2024 குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தே ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.