தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் கோயில் முன்றலில் இரா.மயூதரன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி என்று எம்மை ஏமாற்றிவிட்டு எமக்கு எதிரான செயற்பாடுகளே இலங்கை அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயிலிட்டி துறைமுகம் அதற்கு சாட்சியாகும். மயிலிட்டியை சேர்ந்த மக்களின் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுகத்தை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டபோதிலும் இதுவரை இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் தொழிலினை சீரான முறையில் மேற்கொள்வதற்கேற்ற அடிப்படை விடயங்கள் எவையும் செய்துதரப்படவில்லை. வெளிமாவ்ட்ட பலநாட் படகுகளும், பறிமுதல் செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளுக்குமாகத்தான் இத்துறைமுகம் பயன்படுவருகிறது.
கடல் மீது நாம் கொண்டிருக்கும் உரிமையை எம்மிடம் இருந்து பறித்தெடுக்கும் வகையிலேயே எமது கடற்றொழிலினை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அபிவிருத்தி என்ற போர்வையில் மயிலிட்டி மக்களாகிய நீங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை போன்றே தமிழர்களாக நாமும் ஏமாற்றப்படு வருகின்றோம். சிதறிப்போய் இருக்கும் நாம், தமிழர் தேசமாக ஒன்றிணையும் போதே இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும்.
செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே நாம் அனைவரும் சென்று சங்கு சின்னத்துக்கு நேராக ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமிழர் ஒற்றுமையை வெளிக்காட்டுவோம். தென்னிலங்கை வேட்பாளர்களை இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாக கூட தமிழர்கள் சிந்திக்கவே முடியாது. ஆகவே எமது வாக்கினை சங்குக்கு மட்டுமே வாக்களிப்போம் என தெரிவித்தார். இதன்போது புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், பேச்சியம்மன் ஆலய பரிபாலனசபை நிர்வாகத்தினர், ஊர் மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.