தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை – சுப்பர்மடம் பொது மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூ.சங்க நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு இருதய சத்திரசிகிச்சை பொருந்துமா அல்லது Stent என்னும் உறைகுழாய் பொருத்தப்படுதல் பொருந்துமா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு உங்களுடன் இணைந்து பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கு பற்ற வந்திருக்கின்றேன் என்றால் எந்த அளவுக்கு பொது வேட்பாளருக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கின்றேன் என்பது உங்களுக்குப் புரியவரும்.
எமது வடகிழக்கு மாகாணங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று எனக்குக் கிடைத்த ஆய்வு விபரங்களின் படி (இன்று அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன) திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த நில விஸ்தீரணத்தில் 36 சதவிகிதத்தை அம் மக்கள் தம் கைவசம் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையைத் தந்துள்ளவர்கள் கலிபோர்ணியாவில் இருந்து கடமையாற்றும் ஓக்லண்ட் நிறுவனத்தார்.
அவர்களின் ஆய்வாளர்கள் இங்கு வந்து நிலைமையை அறிந்தே தமது ஆய்வறிக்கையைத் தந்துள்ளார்கள். இதைவிட மிகவும் ஆபத்தான ஒரு விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளிப் பிரதேசம் கடந்த பத்து ஆண்டுகளில் மிக மோசமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்றும் அப்பிரதேசத்தின் 50 சதவீத நிலங்கள், அதாவது 41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும் அரசாங்க திணைக்களங்களால் கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3887 ஏக்கர் கையேற்க்கப்பட்ட காணிகளில் 26 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான மிகவும் செழிப்பான காணிகளிலும் கரையோரப் பிரதேசங்களிலும் இருந்து வந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மக்கள் தமது காணிகளுக்குப் போக முடியாதபடி இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்கள் ஏழில் 5 செயலகங்கள் வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இது நடைபெறுவது இன்றைய ஜனாதிபதி பதவி வகிக்கும் காலகட்டத்தில் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் சஜித் பிரேமதாச அவர்கள். சேர்ந்திருந்த வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் நீதிமன்றம் மூலம் பிரிக்க நடவடிக்கை எடுத்தவர் அனுரகுமார அவர்கள். மூவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இளவல் நாமல் பற்றிக் கூறவே தேவையில்லை. இராபக்சக்களின் மோசமான இனவாத தோற்றத்திற்கு அவர் மெருகூட்டி வருகின்றார். எந்த சிங்கள வேட்பாளர் வந்தாலும் வடக்குக் கிழக்கின் நிலங்கள் கையேற்கப்படுவதுடன் அவற்றின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவதும், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதும் பௌத்த கோவில்கள் கட்டப்படுவதும் ஓயாமல் நடக்கப் போகின்றன. எமது இளைஞர்கள், படித்தவர்களும் பாமரர்களும், நாளாந்தம் வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றார்கள். எமது சனத்தொகை இதனால் குறையப் போகின்றது. ஆகவே சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு எம் மக்கள் வாக்களிப்பது இவ்வாறான தமிழர் எதிர்ப்பு செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இதனால்த்தான் எமது தமிழ் வேட்பாளருக்கு உங்கள் மேன்மையான வாக்குகளை அளியுங்கள் என்று கேட்கின்றோம். அவரால் இவ்வாறான காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த முடியுமா என்று கேட்பீர்கள். முடியும் என்பது எனது பதில். எமது மக்கள் ஒன்றிணைந்து தமது தனித்துவத்தைக் காட்டும் வண்ணம் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், ஆறு இலட்சத்துக்கு மேல் எமது மக்களின் வாக்குகள் பதியப்பட்டால், நாம் உலக அரங்கிலே எமது தனித்துவத்தையும் எமக்கு நேர்ந்த கதியையும் தற்போது எமக்கெதிராக நடக்கும் நடவடிக்கைகளையும் கோடிட்டு சொல்லமுடியும். எமது பொது வேட்பாளரும் அவருடன் சேர்ந்தவர்களும் உலகநாடுகளிலே மற்றும் ஐக்கிய நாடுகளிலே தற்போதைய அவலங்கள் பற்றியும், தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் எமக்கு செய்து வரும் அநியாயங்கள் பற்றியும் கூற முடியும்.
நான் 2018ல் புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. 2020ல் எனக்கு 81 வயது ஆகியிருந்தது. எனினும் உலக நாடுகளில் உள்ள அரச அலுவலர்களிடம் இணையத் தொடர்புகள் மூலம் எமது நிலை பற்றிக் கூறி, எம் மக்களுக்கான சேவைகளைச் செய்து கொண்டு போக முடியும் என்று நினைத்திருந்தேன். அப்பொழுது எனது நண்பர்கள் ஒன்றைக் கூறினார்கள். நீங்கள் நீதியரசராக இருந்திருக்கலாம். முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் வெளிநாட்டு அரச அதிகாரிகளுடன் பேசும் போது இப்பொழுது நீங்கள் யார் என்று கேட்பார்கள். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறும் போது மக்களின் பிரதிநிதி நீங்கள் என்ற ரீதியில் உங்கள் கூற்றுக்களுக்கு வலு இருக்கும் என்றார்கள். ஆகவேதான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன்.
அதேபோல்த்தான் திரு.அரியநேத்திரன் அவர்களுக்கு எமது மக்கள் வெகுவாக வாக்களித்தால் அந்த வாக்குகளுக்கு ஒரு மதிப்புண்டு; மாண்புண்டு! அதை வைத்து அவரை தமிழ் மக்களின் ஒரு அடையாளமாகக் காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்குக் கூறி இலங்கை அரசாங்கம் எமக்கு தொடர்ந்தும் இன்னல்களை விளைவிப்பதைத் தடுக்கலாம். தற்போது வெளிநாடுகள் எமது அரசாங்கத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் இலங்கையை சரிவர எடை போடுவதாகவே அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் ஒருமித்து தமது ஒற்றுமையை, தேசியத்தை, ஒருங்கிணைந்த குறிக்கோள்களை இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி எமது அரசாங்கத்தை விழித்தெழச் செய்யும். அதனால்த்தான் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு நீங்கள் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது ஒற்றுமை ஒன்றே எம்மை இரட்சிக்கும். எமது ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் படித்த முட்டாள்கள் சிலர் நடந்து வருகின்றார்கள். சிலர் சிங்கள வேட்பாளர்களுடன் கைகோர்க்க வேண்டும் என்கின்றார்கள். மற்றும் சிலர் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றார்கள். சிங்கள வேட்பாளர்களுடன் கைகோர்ப்பது குறித்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க இடமளிக்கலாம். அதனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன இலாபம்? நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்து இந்தா தீர்வு வருகின்றது. அந்தா தீர்வு வருகின்றது என்று திரு.சம்பந்தன் அவர்கள் நம்பிக்கையுடன் கூறிவந்தார். ஆனால் தீர்வு வந்ததா? அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமும் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. எனவே பெரும்பான்மையின வேட்பாளர்களை ஆதரிப்பது தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.
பகிஸ்கரிப்பவர்கள் ஏன் நாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்வியைத் தம்மைத் தாமே கேட்க வேண்டும். புலிகள் முன்னர் பகிஸ்கரித்தார்கள் ஆகவே நாமும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சூழலையும் கால கட்டத்தையும் மறந்து பேசுகின்றார்கள். அன்று புலிகளுக்குப் பலம் இருந்தது. அன்று மலையக மக்களுக்கு அவர்களின் அரசியல் போராட்டங்களின் போது தொழிற்சங்க பலம்
இருந்தது. இன்று இவர்களுக்கு என்ன பலம் இருக்கின்றது? இவர்கள் பகிஸ்கரித்தால் அது யாருக்கு நன்மை? எவருக்கும் இல்லை. யாருக்குப் பாதிப்பு? எவருக்கும் இல்லை. சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தொடங்கிய இந்த பகிஸ்கரிப்பாளர்கள் இப்பொழுது தமிழ் வேட்பாளரையும் பகிஸ்கரியுங்கள் என்கின்றார்கள். ஏன் என்றால் திரு.அரியநேத்திரன் அவர்கள் சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள். திரு.அரியநேத்திரன் அவர்கள் தனது கட்சியுடன் முரண்டே பொது வேட்பாளராக நிற்கின்றார். அவர் தமது வருங்கால அரசியல் வாழ்க்கையைத் தியாகம் செய்தே பொது வேட்பாளராக நிற்கின்றார். இந்தத் தேர்தலில் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நன்மையும் கிடையாது. அவர் தேர்தலில் வெல்லப் போவதும் இல்லை. அப்பேர்ப்பட்ட ஒருவரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி இந்த பகிஸ்கரிப்பாளர்கள் தங்களை தமிழ் மக்கள் மனதில் தாழ்த்தியே வருகின்றார்கள்.
அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் இம் மாதம் 21ந் திகதியன்று காலையிலேயே நேரத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.