நோர்வேயின் Kongsberg நகரில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் வில் மற்றும் அம்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் மர்ம நபர் தாக்குதல்! – பலர் பலி
நோர்வேயில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் Kongsberg நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது.
மர்ம நபர் ஒருவர் வில் மற்றும் அம்பை கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள Kongsberg நகரில் உள்ளூர் நேரப்படி 18:13 மணியளவில் (16:13 GMT) தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. எனினும், உள்ளூர் ஊடகங்கள் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. இது பயங்கரவாத செயலா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“இந்த தாக்குதல் ஒரு மோசமான சோக சம்பவம் என Kongsberg நகர மேயர் Kari Anne Sand தெரிவித்துள்ளார். இதனை விபரிக்க தன்னிடம் வார்த்தையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவருக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தற்போது Drammen நகரில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை. அம்யூலன்ஸ், பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட டஜன் கணக்கான அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் குறித்து நோர்வேயின் நீதி அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது. நிலைமை குறித்து உன்னிப்பான அவதானித்து வருவதாக நோர்வே நீதி அமைச்சு கூறியுள்ளது.