
தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வனலாகா திணைக்கள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அக்கராயன் வீதியை அண்மித்த பகுதியில் ரிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வனலாகா திணைக்களத்தினர் தன்னை இரும்ப கம்பியினால் தாக்கியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பின்னர், தமது அலுவலகத்திற்கு தன்னை அழைத்து சென்று அதன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட வேண்டாம் எனவும், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததாக கூறுமாறும் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.