தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சாரணர் வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட சாரணிய சங்க தலைவர் கி.விக்கினராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த வாரத்தினை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் , மாவட்ட சாரணிய ஆணையாளர் சு.விக்கினேஸ்வரன், பாடசாலைகளின் சாரணிய பொறுப்பாசிரியர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி, திருவையாறு மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் , வட்டக்கச்சி மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளிலிருந்து 140 மாணவர்கள் வரை கலந்து கொண்டனர்.
சாரணர் வாரத்தில் நட்பு, இளைஞர்கள், சமயம், சுற்றாடல், தொகைமதிப்பு என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.