
தொடர்ச்சியாக எமது நாட்டு கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றச்சாட்டுவதை விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையையும், சட்டத்தையும் தமிழக முதலமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அவர்களை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கே மூன்று கோரிக்கைகளை அவர் முன் வைத்துள்ளார். தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுகின்றார்கள், சிறைபிடிக்கப்படுகிறார்கள். அது சம்பந்தமாக கலந்துரையாடி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வருகின்ற மாதம் இலங்கையிலே கூட்டப்பட இருக்கின்ற இலங்கை இந்திய கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்தோடு ஏழு வருடங்களுக்குள் 191 படங்கள் பிடிபட்டதாகவும் அதிகமான மீனவர்கள் சிறையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கின்றார்.
2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் வந்த பிறகு இவர்கள் அது குறித்து சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், 2017 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெளிநாட்டு மீனவர் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது அந்த சட்டம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து படக்குகள் பிடித்து பறிமுதல் செய்வது அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் படகுகளை பிடிப்பது என்பது மந்த கதியில் இருக்கின்றது.
அப்படி ஒரு சட்டத்தை இங்கு அமலுக்கு கொண்டுவந்து, 2016 உடன்படிக்கையையும் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தமிழக முதலமைச்சர் இப்படியான கோரிக்கைகளை முன்வைப்பது எமக்கு மிகவும் மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகின்றது.
தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன், 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும்.
எமது நாட்டிலே உள்ள கடற்படையையும், அரசாங்கத்தையும் குறை சொல்வதை விட்டுவிட்டு வெளிநாட்டு அமைச்சு இணையதளத்தில் இருக்கின்ற அந்த சட்டத்தை படித்துவிட்டு அதற்கு தகுந்தாற் போல் செயல்பட வேண்டுமே தவிர, தமிழ்நாட்டு மீனவர்களை காலத்திற்கு காலம் ஏமாற்றுவதை போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் ஒரு கவலைக்குரிய விடயம். இதனை அறியாத தமிழ்நாட்டின் மீனவர்களும் உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.