கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆரோக்கியமான விவாதங்களிற்கும், கருத்துப் பரிமாறல்களிற்குமான களமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் கல்விச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளவல்ல அறிவு முதிர்சியினை கொண்டிருப்பர்.
அண்மையில் 15 பல்கலைக்கழக ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிற்கு எதிராக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்ட அநாமதேய சுவரொட்டி, முதலான சில சம்பவங்கள் கருத்து சுந்திரத்திற்கான வெளியினை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளன.
இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளின் பின்னால் உள்ளவர்களின் அநாகரீகமான நடவடிக்கைகளால்; அவர்கள் தங்களை மாத்திரமன்றி இப் பல்கலைக்கழகத்தினையும் இழிவுபடுத்துகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு களங்கத்தினை ஏற்படுத்தியுள்ள இவ்வாறான அநாகரீகமான செயற்பாட்டினை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews