யாழ்ப்பாணத்திலிருந்து சிவில் உடையில் சென்ற போலீஸ் குழு ஒன்று முல்லைத்தீவில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டுவந்ததுடன் அவர்மீது மூர்க்கத்தனமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குதொடுவாயை சேர்ந்த ஆறுமுகம் ஜெயராசா என்பவரை கடந்த 05/10/2024 ஞாயிற்றுக்கிழமை சிவில் உடையில் சென்ற யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இயங்கும் விசேட குற்றப்பிரிவு போலீசார் அவரை வெள்ளை நிற கார் ஒன்றில் முறைப்படி கைது செய்யப்படாது அழைத்துவந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆறுமுகம் ஜெயராசாவை காணவில்லையென அவரது உறவினர்கள் தேடியலைந்துள்ளனர்.
ஒருவாறாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மல்லாகத்திலுள்ள விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் அவரை தடுத்துவைத்து வைத்துள்ளதை அறிந்து யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று 08/10/2024 புதன்கிழமை காலை குறித்த மல்லாகம் விசேட குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவிற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் இணைப்பாளர் குறித்த அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் பல மணிநேரமாக போலீஸார் மறுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயராசா அவர்களது உறவினர்கள் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் இணைப்பாளரிடம் பல மணி நேரத்தின் பின் தாம் ஒரு களவு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பார்வையிட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் அவர்மீது பலத்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது எனும் சந்தேகத்தின் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியின் முன் நிறுத்தி உடனடியாக மருத்துவ அறிக்கை, மருத்துவ சிகிச்சை வழங்குமாறு பணித்துள்ளார்.
வெளிநாட்டில் வதியும் ஒருவருக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையில் வணிக ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும் இதனால் அவர் செய்த முறைபாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றிருக்காலாம் என்றும், குறித்த நபர் வதியும் பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொலீஸிலேயே முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊடாகவை கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், இவ்விடயத்தில் போலீஸார் பக்க சார்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.