மாமனிதர் தராகி சிவராம் கொலை மற்றும் காணமல் ஆக்கப்பட்ட சில செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணைகளுக்கு இலங்கையின் புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் துரிதகதி விசாரணைகளின் அளவீடுகள் மற்றும் விசாரணை அறிக்கையின் பின்னரான விளைவுகள் கடந்த கால அனுபவங்களில் எதிரான பார்வையையே வழங்குகின்றது. செப்டெம்பர்-21 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட அநுரகுமார திசநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஆட்சி மாற்றத்தையே உருவாக்கியுள்ளது. இலங்கையின் பேரினவாத சிந்தனையில் வடிவமைக்கப்பட்ட அரச இயந்திர கட்டமைப்பில் மாற்றத்தை உருவாக்கியிருக்கவில்லை. இவ்கட்டமைப்பின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் ஒருதளப் பார்வையையே வழங்கியுள்ளது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இடம்பெற்ற விசாரணைகளில் பல அப்பாவி தமிழ் இளைஞர்களே ‘புலிகள் மீளுருவாக்கம்’ என்ற விம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இக்காலப்பகுதியிலேயே மாணவர் ஒன்றிய அலுவலகத்தில், ஈழத்தமிழர்களின் நீதிகோரி இடம்பெற்ற பதாகைகளை காரணங்காட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரும், புலிகள் மீளுருவாக்கம் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான அனுபவங்களில் சமகால துரித விசாரணைகளும் திசைமாறுமா என்பதிலே ஈழத்தமிழர்களின் பார்வை குவிக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி கடந்த காலங்களிலும் பல விசாரணை அறிக்கைகள் கோப்புகளாக்கப்பட்டுள்ளன. அதற்கான நீதிப்பொறிமுறைகள் முழு வடிவம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறான அனுபவங்களின் தொகுப்புக்குள்ளேயே புதிய அரசாங்கத்தின் விசாரணைகள் ஈழத்தமிழர்களால் நோக்கப்படுகின்றது.
ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விம்பங்களை உருவாக்கி பிரச்சாரப்படுத்துவதில் வல்லவர்களாக உள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியில் அரசியல் மாற்றம் எனும் விம்பத்தை கட்டமைத்து வெற்றி பெற்றிருந்தார்கள். அவ்விம்பத்துடனேயே பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னடவடிக்கைகளும் முழு இலங்கைத் தீவிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகையதொரு விம்ப யுக்தியாகவே விசாரணை அறிவிப்புக்களும் காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில், அரசாங்கம் முன்னகர்த்தியுள்ள குறித்த ஏழு விடயங்கள் தொடர்பான விசாரணைகள், சிகரத்திற்கும் அதில் உள்ள தூசுக்கும் இடையிலான தொடர்பாகவே அவதானிக்க வேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை ஒரு சில விடயங்களுக்குள் சுருக்குவதில்லை. குறித்த விசாரணையை அதிகம் இராஜதந்திர நுட்பங்களுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. இவ்இராஜதந்திர அரசியலை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
முதலாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தினை நீர்த்து போகச் செய்யும் முன்னகர்வாகவே அமைகின்றது. நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உலிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான இத் தீர்மானத்தில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் திரட்டலுடன் சர்வதேச நீதிப்பொறிமுறை உள்வாங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசாங்கங்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையை முழுமையாக நிராகரித்து வருகின்றார்கள். ஜே.வி.பி அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை தொடர்ச்சியாக நிராகரித்துள்ளனர். இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தில், ‘வெளிப்புற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை உடன்படவில்லை’ என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜனாதிபதியின் கூற்றுப்படி, உள்நாட்டு பொறிமுறையின் நம்பகத்தன்மையுடனும், உறுதியானதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள தெளிவாக அடையாளம் காணப்பட்ட பல பொறுப்புக்கூறல் வழக்குகள் மீதான விசாரணையை இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்அறிக்கையை ஒப்புவிக்கும் வகையிலேயே குறித்த ஏழு விடயங்கள் தொடர்பான விசாரணை சார்ந்து, கடந்த வாரம் பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் செய்தியிடல் அமையப்பெற்றுள்ளது.
இரண்டாவது, ஏழு விசாரணைகளும் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளையும், காணமலாக்கப்பட்டதையும் தவிர்த்துள்ளது. முழுமையாக ஜே.வி.பி தனது அரசியல் பலத்தை உறுதி செய்து கொள்வதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புறும் வகையிலான குற்ற விசாரணைகளையே முன்னெடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அன்றைய காலப்பகுதியின் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் நீதிமன்றத்தாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தது. பிணைமுறி விவகாரம் ரணில் விக்கிரமசிங்க மீது பொதுவெளியில் குற்றச்சாட்டு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சமுக செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவின் தலையீடு சந்தேகிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலதிகமாக இச்செயற்பாட்டாளர்கள் ஜே.வி.பி-யை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தராகி சிவராம் கொலை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரவீந்திரநாத் காணாமல்போனமை விவகாரங்களில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பொதுவெளியில் சந்தேகங்கள் காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணிகளில் அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக வெளிப்படுத்தும் விசாரணைகள் முழுமையாக ஜே.வி.பி தனது அரசியல் எதிரிகளை அச்சமூட்டும் செயற்பாடாகவே அமைகின்றது. பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஜே.வி.பி-க்கு அரசியல் கட்சியாக நலன் சேர்ப்பதாகவே அமைகிறது. மாறாக ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கைகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை.
மூன்றாவது, ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை விசாரணையை முன்னகர்த்தியுள்ள அரசாங்கம், ஊடகவியலாளர் இசைப்பிரியாவினை இலங்கை இராணுவம் படுகொலை செய்யப்பட்டமையை தவிர்த்துள்ளமை, விசாரணை அறிவிப்பை சந்தேகத்திற்குள்ளாக்கிறது. 1996இல் விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவான நிதர்சனம் சேவையில் இசைப்பிரியா என அறியப்படும் சோபா இணைந்தார். அங்கு அவர் முக்கியமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு இறுதிப்போர் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக நிர்வானமாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டர். சனல்-4 வெளியிட்ட பயங்கரமான புகைப்படங்கள் மற்றும் காணொளி பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகளுடன் இரத்தம் தோய்ந்த முறையில் கொலை செய்யப்பட்டதைக் காட்டியது. எனினும் இலங்கை ஒரு வெளிப்படையான பாரபட்சமற்ற விசாரணை மூலம் இந்த சம்பவத்தை விசாரிக்க முயற்சிக்கவில்லை. ஈழத்தமிழ் பரப்பில், இலங்கை இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா முதலாவதாக இல்லை. வெளிப்படையாகவே கடைசியாகவும் இல்லை. கிரிஷாந்தி குமாரசாமி, ஐடா கமலிதா, கோணேஸ்வரி, சாரதாம்பாள், தர்ஷினி முருகுப்பிள்ளை போன்ற நீண்ட பட்டியலில் அவர் ஒரு பாதிக்கப்பட்டவர் மற்றும் பட்டியல் தொடர்கிறது. இத்தகைய கொடூர வரலாற்றை ஜே.வி.பி பகிர்ந்துள்ளது. ஆனால் அதற்கான நீதிப்பொறிமுறை வேறுபடுகிறது. 1971இல் ஜே.வி.பி போராளி பிரேமாவதி மன்னம்பேரி ஜே.வி.பி கிளர்ச்சியில் பங்கேற்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தால் மிலேச்சத்தனமாக சித்திரவதை செய்யப்பட், நிர்வாணமாக்கி கதிர்காமம் தெருக்களில் ஊர்வலமாய் கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும் மன்னம்பேரிக்கான நீதி வேறுபடுகிறது. மன்னம்பேரியை கொலை செய்த இராணுவத்தினர் இருவர் இலங்கை சட்டத்தால் தண்டிக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலப்பகுதியில் 1979ஆம் ஆண்டு சஜித் பிரேமதாச மன்னம்பேரிக்கான நினைவுச் சின்னத்தை கதிர்காமத்தில் நிறுவியுள்ளார். அதேவேளை இலங்கை சட்டத்தில் திருப்தி அடையாத ஜே.வி.பி-யினர் 1989ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சிக் காலப் பகுதியில் மன்னம்பேரி கொலை வழக்கில் இலங்கை சட்டத்தில் தண்டிக்கப்பட்டு, விடுதலையடைந்த இராணுவத்தினர் ஒருவரை மாத்தளையில் கொலை செய்தனர். இத்தகைய கடந்த கால பின்புலத்தை கொண்டுள்ள ஜே.வி.பி ஊடகப் போராளி மீதான இலங்கை இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலையை தவிர்ப்பது, ஜே.வி.பி-யின் உள்ளார்ந்த வடிவத்தை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.
எனவே, இலங்கை ஜே.வி.பி அரசாங்கத்தின் நீதிபொறிமுறையும், இலங்கையின் கடந்தகால அமைப்பின் தொடர்ச்சியாகவே வடிவமைக்கப்படுகின்றது. தமது அரசியல் நலனை ஈடேற்றும் நோக்குடனேயே நகர்த்தப்படுகின்றது. இவ்விசாரணைகளும் அவசியமானது. எனினும் தென்னிலங்கை நலன்சார் விசாரணைக்குள், ஈழத்தமிழர்கள் மீது அரச இயந்திரத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான உயர்ந்தபட்ச நீதித்கோரிக்கைகளை கரைத்துவிட முடியாது. ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கைகளை கடுகளவும் உள்வாங்க தயாரில்லாத மனநிலையிலேயே ஜே.வி.பி அரசாங்கமும் காணப்படுகின்றது. இது இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும். தனிநபர்களின் மாற்றத்தால் உருவாகிய ஆட்சிமாற்றம் அரசியல் மாற்றத்தை உருவாக்க போதுமானதாக அமையவில்லை. ஜே.வி.பி போராளி மன்னம்பேரி மீது நிகழ்த்தப்பட்ட கொடுரமான படுகொலையை ஜே.வி.பியின் கண்கள் அநீதியாக பார்த்தது. ஊடவியலாளர் இசைப்பிரியாவை தமிழ்ப் போராளி விம்பத்துக்குள் தள்ளி, அவர் மீதான படுகொலையை ஜே.வி.பி தவிர்த்து செல்ல முயற்சிக்கிறது. இவ்பாரபட்சமான அரசியல் கலாசாரத்தை தொடரும் ஜே.வி.பி அரசியல் மாற்றத்தை உருவாக்குமென கருதுவது நம்பிக்கையீனமானதாகும்.