தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருந்ததால் நிராகரிக்கப்பட்ட சீன உரத்தினை சுமந்து வரும் கப்பல் சிங்கப்பூரில் இருந்து மீளவும் இலங்கைக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹாரிசன் இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த உரம் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார். இந்த உரம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சீன தூதரகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது, எனினும், அவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று சொல்லும் அதிகாரம் அரசாங்க அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஆளுநர் ராஜித் கீர்த்தி தென்னக்கோனும் சீன உரங்களை ஏற்றி வந்த கப்பல் மீளவும் இலங்கைக்குத் திரும்புவதாகக் தெரிவித்துள்ளார். சில நாட்களில் குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.