அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு கைதிகளை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்று நாட்டின் முன்னணி கைதிகள் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது.
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினரான அமில குமாரசிங்க மற்றும் துலாந்த ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.
துலாந்த ராஜபக்ச சிறைச்சாலையில் மனிதாபிமானமற்ற தாக்குதலை அடுத்து தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தலையில் உட்புற இரத்தப்போக்கு காணப்படுவதாகவும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறைக்கு வெளியே மதுபோதையில் இருந்த சிறை அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக சிறைச்சாலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சுதேஷ் நந்திமால் சில்வா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சிறை அதிகாரிகள் குழு கடந்த 8ஆம் திகதி காலை அங்குனகொலபெலஸ்ஸாவில் உள்ள உணவகத்திற்கு சென்று இலவசமாக மதுபானம் கோரியுள்ளனர். உணவகத்தின் உரிமையாளரான அமில குமாரசிங்கவே சித்திரவதைக்கு உள்ளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவக ஊழியர் பணம் இல்லாமல் மதுபரிமாற மறுத்ததை அடுத்து, மதுபோதையில் இருந்த சிறை அதிகாரிகள் ஊழியரை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக் கொண்டனர். மறுநாள் காலை, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவுக்கும் அங்குனகொலபெலஸ்ஸவில் உள்ள உணவக ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலின் போது இரு தரப்பும் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோதலுக்குப் பின்னர் உணவக ஊழியர்களுக்கு எதிராக சிறை அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டில் அடிப்படையில், பிரதேச சபை உறுப்பினரான அமில குமாரசிங்க மற்றும் துலந்த ராஜபக்ச ஆகியோர் ஒக்டோபர் 9ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இருவரும் ஒக்டோபர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இரண்டு கைதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி மொஹொட்டி மற்றும் சட்டத்தரணி பிரதீப் ராஜபக்ச ஆகியோர் நீதவான் தர்ஷிமா பிரேமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணிகளின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இருவருக்கும் பாதுகாப்பளிக்குமாறு அங்குனகொலபெலஸ்ஸ சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். சந்தேகநபர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக மாத்தறை சிறையில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் கைது செய்யப்பட்டவர்கள் அதே நாளில் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு சந்தேகநபர்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச்செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.
” அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு உயிர்ப்போகும் நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” துலாந்த ராஜபக்ச தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அமில குமாரசிங்க மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரண்டு கைதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் குழு ஒக்டோபர் 11ஆம் திகதி மீள் விசாரணைக்கு அழைப்பு விடுத்ததோடு, சிறைக்குள் நடந்த தாக்குதல் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்தியது. மேலும், அங்குனகொலபெலஸ்ஸ சிறையிலிருந்து அவர்களை மாற்ற வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அதிகாரிகளால் தாக்கப்பட்ட இரண்டு கைதிகளையும் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும், தாக்குதல் குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் குழு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தவும் அங்குனகொலபெலஸ்ஸ நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.