2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு, 22 தேர்தல் மாவட்டங்களிலும், கட்சிகள் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 அணிகள் போட்டியிடுகளின்றன.
இதில் வடக்கு-கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் மாத்திரம் 235 அணிகள் களமிறங்கியுள்ளன. ஏனைய 17 தேர்தல் மாவட்டங்களிலும் 455 அணிகள் களமிறங்கியுள்ளன.
உச்சபட்ச ஜனநாயக வெளிப்பாட்டை தமிழ்ப் பகுதிகளிலேயே அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது. உச்சபட்ச ஜனநாயக வெளிப்பாடு, சில சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையக்கூடியதாகும். 2024இன் ஆரம்பத்தில் ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதாகவே தமிழரசுக்கட்சி கட்சி தலைமைத்துவத்திற்கான உள்ளக தேர்தலை வரவேற்றிருந்தது.
தற்போது கட்சி ஒரு வருடங்களை அண்மித்து நீதிமன்ற வழக்கிற்கு தள்ளப்பட்டுள்ளது. இக்கட்டுரை அரசியல் கட்சிகளின் போட்டியால் பலமிழக்கப்படும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அடையாளப்படுத்துவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுத்தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இலங்கையின் புவிசார் அரசியல் அமைவிடம், பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சக்திகளின் கவனத்தை குவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர்-14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியுதவியுடன், சிறுபான்மையினர் அதிகாரமளிக்கும் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியுள்ளது. இவ்ஆய்வில், ‘சிறுபான்மை இன மற்றும் மத குழுக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம், சிறுபான்மையினரின் உரிமைகளை திறம்பட அரசியல் ரீதியாக ஈடுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர்களின் திறனை பாதிக்கும். வரவிருக்கும் தேர்தல்களில் பிளவுபடும் மற்றும் பலவீனமடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் அரசியல் கட்சிகளின் பலவீனங்களும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சிறுபான்மை தேசிய இனங்கள் மீது கவனம் செலுத்தாமையும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சமகி ஜன பலவாகய (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற பிரதான தேசியக் கட்சிகள் சிறுபான்மையினர் பங்குபற்றுவதற்கும் அவர்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கும் தமது கட்சிகளுக்குள் தொடர்ச்சியாக இடைவெளியைக் குறைத்துள்ளன. சிறுபான்மை இனக் கட்சிகள் பிளவுபட்டு, அவர்களின் சமூகங்களின் தேவைகள் மற்றும் உரிமைகளுக்கு மாறாக, அவர்களின் பிரச்சாரம் பெரும்பான்மையான நிகழ்ச்சி நிரலால் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என என்று ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பரா மிஹ்லர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு-கிழக்கில் சிதறடிப்பட்டுள்ள அரசியல் கட்சிகளால், தமிழ் மக்களின் வாக்குப்பலமும் சிதறடிக்கப்படும் அவலமே காணப்படுகின்றது. ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்களின் தேர்தல் ஈடுபாடு பற்றிய குறிப்பில், ‘மோதல் பகுதிகளில் வாக்காளர்கள் இன மற்றும் அரசியல் அடிப்படையில் ஆழமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இது சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. வடக்கில் வாக்காளர் தளம் சிதைந்துள்ளதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, அரசுடன் ஈடுபட விரும்புவதாகவும், மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் தென்னிலங்கை அரசியலில் இருந்து விலக விரும்புவதாகவும் ஆய்வு காட்டுகிறது.’ இது தமிழ் மக்கள் பொதுத்தேர்தலில் சிதறுண்ட எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய சூழமையே உறுதி செய்கின்றது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரதிநித்துவத்தை வழங்கியிருந்த தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால உதாசீன போக்குகளின் விளைவினாலேயே, தமிழ் மக்கள் சிதறடிக்கப்படும் அவலத்தை விவாதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள், ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிலைமாறுகால நிலையை மாற்றி, நிலையான தளத்திற்கு தம்மை கட்டமைக்க தவறியுள்ளார்கள். தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைகளை வெறுமனவே அரசியலாக்கவே முனைந்துள்ளார்கள். மாறாக தமிழ் மக்களின் உரிமைகள் அல்லது இன மோதலுக்கு அரசியல் தீர்வு குறித்த ஆக்கபூர்வமான கொள்கைகளை பரிசீலிக்கவோ அதற்கான களத்தை உருவாக்குவதற்கோ இதயசுத்தியுடன் செயற்பட்டிருக்கவில்லை. இவற்றின் பிரதிபலிப்புகளாகவே தமிழ் மக்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தென்னிலங்கை அரச கட்சிகளுடன் இணைய தயாராவதோ அல்லது தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த வெறுப்பால் ஒதுங்கும் நிலைகளும் விவாதிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனவே தேர்தல் அரசியல் நலன்களுக்கும் பயனிக்கும் அமைப்புக்களாகவே காணப்படுகின்றன. குறைந்தபட்சம் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு பற்றி சிந்திப்பார்களாயின், தமக்குள் சிதறுண்டு தமிழ் மக்களை மேலும் சிதைக்கும் இழிவான வேலையை செய்திருக்கப்போவதில்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் மீது மாத்திரம் தவறுகளை சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் அவல நிலையிலிருந்து விலகி செல்ல முடியாது. இத்தகைய அரசியல்வாதிகள், வானில் இருந்து இறைதூதர்களாக அனுப்பப்பட்டவர்கள் இல்லை. மத்திய கால தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் தமிழ் மக்கள் பயனிக்கவில்லை. ஜனநாயக பொறிமுறைகளுக்கு மக்கள் அதிகார கோட்பாட்டிற்குள் இருந்தே இத்தகைய அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, கடந்த கால அரசியல் பிரதிநிதிகளின் தவறுகளுக்கு தமிழ் மக்களின் தெரிவும் மௌனமும் ஒரு பிரதான பொறுப்பாகும். 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படும் பலவீனத்தை, தமக்கு சாதகமாக்கி கொண்டு, தமது வாக்கு வங்கிகளை அதிகரிக்க தென்னிலங்கை அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன. எனினும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தெளிவாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிராகரிப்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஜே.வி.பி-யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமில்லை. பொருளாதார தேவைகளே காணப்படுகின்றது’ என்றவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான மனநிலைமைகளிலேயே ஏனைய தென்னிலங்கை கட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறே செயலாற்றி வந்துள்ளன. ஒரு சில கட்சிகள் 13ஆம் திருத்தத்தை உரையாடுகின்ற போதிலும், அது அதிகாரப் பகிர்வை மறுக்கின்ற ஒற்றையாட்சி வரைபாகவே அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. சிங்கள பேரினவாதத்தால் ஏமாற்றப்பட்டு, ஒடுக்கப்படும் கடந்த நூற்றாண்டு கால வரலாற்றை பகிரும் தமிழ் மக்கள், அதிகாரப் பகிர்வு கோரி அது சாத்தியப்படாத என்ற சூழலில் தனிநாட்டு போராட்டத்தை முன்னெடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார தீர்வுகளுக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்த்துக்கொள்ளப்பட முடியாது என்பது சுதந்திர இலங்கையின் 76ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அனுபவமாகும். தற்போது பொருளாதார பிரச்சினை என்பது ஒட்டுமொத்த இலங்கைத் தீவிற்கும் உரியது. இதன் மூலமும் இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைமை மையப்படுத்தி உருவாகியதாகவே அமைகின்றது. எனவே ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதார பிரச்சினையே தேசிய இனப்பிரச்சினை தீர்வோடு இணைந்திருக்கையில், ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையை மறைத்து பொருளாதார பிரச்சினையாக சுருக்குவது முழு இலங்கைக்கும் ஆபத்தானதாகவே அமைகின்றது.
ஏற்கனவே, பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அரசியல் பலவீனப்படுகையில், அதன் இருப்பு கையறு நிலைக்கு செல்லும் ஆபத்துக்களே காணப்படுகின்றது. இப்பகுதியின் முன்னைய கட்டுரைகளில், ஈழத்தமிழர்களின் நிராகரிப்பு தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் தேசியத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரலில் செயற்படக்கூடிய தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் போலித் தேசியவாதிகளை அடையாளம் கண்டு நிராரிப்பது அவசியமென, ‘பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை சரியான தெரிவினை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்வதிலும், விழிப்படைவதிலையுமே ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
ஒன்று, ஜனநாயகம் தொடர்பில் தமிழ் மக்களிடையே சரியான விழிப்புணர்வு அவசியமாகின்றது. ஈழத்தமிழரசியலில் ஜனநாயகம் பற்றிய உரையாடல் அதிகம் காணப்படுகின்றது. எனினும் அதன் நடைமுறையாக்கம் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. ஜனநாயகம் மக்கள் அதிகாரத்தை முதன்மைப்படுத்தும் கருத்தியலாக கோட்பாடாக காணப்படுகின்ற போதிலும், நடைமுறையில் ஜனநாயகத்தில் மக்கள் அதிகாரம் என்பது தேர்தல் காலத்தில் மாத்திரமே மேலோங்குகின்றது. தேர்தலில் வாக்கு சேகரிக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் தாம் மக்களின் சேவையாளர்கள் என்பதை உணர்ந்து கொள்கின்றார்கள். வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்திற்கு சென்ற பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுகள் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறந்தே செயல்படுகின்றார்கள். எனவே தேர்தல் காலப் பகுதியில் அரசியல் தரப்பினரை சரியாக அடையாளம் காணும் வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பு மக்களிடம் காணப்படுகின்றது. ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதி, தமது ஒடுக்குமுறை வாழ்க்கையை பிரதிநிதித்துவம் செய்பவராகவும், அதில் இருந்து தம்மை மீட்பதற்கு உண்மையாக செயல்படக் கூடியவரையும் தெரிவு செய்தல் அவசியமாகும். குறிப்பாக மக்களோடு நெருங்கி பழகுபவராக, சாதாரண மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளக்கூடிய சக மனிதரையே பாராளுமன்ற பிரதிகளாக தெரிவு செய்வதே பயனுடையதாகும். மாறாக மக்களோடு செயல்படாத இறக்குமதி அரசியல்வாதிகளையும், அண்ணாந்து பார்க்கும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தெரிவு செய்து வந்துள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்தும் பலரும், தமிழ் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் சந்தர்ப்பங்களிலேயே ஸ்ரீலங்கா காவல்துறையின் பாதுகாப்புடனேயே செல்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினை உணராதவர்களாய், தங்களது நிகழ்ச்சி நிரலுக்குள் எதேச்சதிகாரமாய் செயல்படும் சூழ்நிலைகளே காணப்பட்டது.
இரண்டு, பொறுப்பு கூறல் அவசியமான பொறிமுறையாகும். ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறல் உயர் கடப்பாடாகும். இப்பொறுப்புக்கூறலை தேர்தல் காலத்திலேயே அளவீடு செய்யக் கூடியதாக அமைகின்றது. ஏனெனில் தேர்தலுக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் பொறுப்புக் கூறலுக்கான உத்திகளோ அல்லது சுவிற்சர்லாந்து போன்று மீள அழைப்பதற்கான பொறிமுறைகளோ இலங்கை அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் காணப்படுவதில்லை. தார்மீகரீதியாக பொறுப்புக்கூறும் உயர் அரசியல் கலாசாரம் இலங்கை அரசியல்வாதிகளிடம் காணப்படுவதில்லை. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமருன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பில், மக்கள் எண்ணங்களுடன் வேறுபடுவதை மக்கள் தீர்ப்பில் அறிந்த போது பதவியை இராஜினாமா செய்தார். இது உயர்ந்தபட்சமாக மக்கள் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. டேவிட் கமருனின் தார்மீக ரீதியான பொறுப்புக்கூறலை உணர்த்துகின்றது. இத்தகைய அரசியல் கலாசாரத்தை ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதில்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகை பரிசாக தீர்வை வாக்குறுதியளிக்கும் பண்பாட்டையே கொண்டுள்ளார்கள். ஐந்தாண்டு கால தேர்தல் காலப்பகுதியிலேயே, இலங்கையில் அரசியல் தரப்பினரிடம், பொறுப்புக்கூறலை கேள்வி எழுப்ப கூடியதாக காணப்படுகின்றது. தென்னிலங்கையிடம் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறலை கோரும் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் பிரதிநிதிகளிடம் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவது அவசியமானதாகும். குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமுக பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலை கோர வேண்டும். அதேவேளை எதிர்கால செயற்றிட்டங்கள் அதற்குரிய அணுகுமுறைகளை தெளிவுபடுத்துவற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். வினைத்திறனான பதிலளிக்க தவறுபவர்களை நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்கள் கேள்வி எழுப்புவது தூய்மையான அரசியலை அடையாளம் காண்பதற்கு பொருத்தமானதாக அமையும்
மூன்று, தமிழ் மக்களின் அரசியல் முதிர்ச்சியானவர்களின் அரசியல் கூடாரமாக பலவீனம் அடைந்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. மாறிவரும் உலகை புரிந்துகொள்ளக்கூடியவர்களாயும், மாறிவரும் உலகின் தொழில்நுட்பத்தை அரசியல் சமுக மாற்றத்திற்கு கையாளக்கூடிய இளையவர்களையும் புதியவர்களையும் தமிழ் மக்கள் தெரிவு செய்வது தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. முதியவர்களின் அனுபவம் ஆலோசனையாக அமையலாமே அன்றி அதிகாரத்திற்கு அவசியமானது இல்லை என்பதே சர்வதேச அரசியலிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதிர்ச்சி காரணமாக நவம்பர் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலினை தவிர்த்து கொண்டார். தென்னிலங்கையிலும் மாற்றம் புதியவர்கள் என்ற அலையின் தாக்கம் காரணமாக கடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலிருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார்கள். தமிழ் அரசியல் பரப்பில் தேர்தலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஒதுங்கியுள்ளனர். எனினும் இவர்கள் கடந்த பாராளுமன்ற காலப்பகுதியில் மதுபான கடைக்கு அனுமதிக்கு சிபார்சு கடிதம் வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மற்றைய பலரும் தொடர்ச்சியாக போட்டியிடும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஒரு சில கட்சிகள் கடந்த கால முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இளையவர்களை இணைத்துள்ளதாக விம்பப்படுத்துகின்ற போதிலும், அவ்இளையோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்கு சேகரிப்பவர்களாகவும், கடந்த கால அரசியல் நடத்தைகள் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமானதாகவுமே அமைகின்றது. இளையவர்கள் புதியவர்கள் தெரிவில் தமிழ் மக்கள் தெளிவாக ஆராய்ந்து தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கக்கூடிய ஆளுமையுள்ளவர்களை தெரிவு செய்தல் வேண்டும். இன்றைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் வெளிப்படுத்திய அசமந்த போக்கை தமிழ் மக்கள் தவிர்த்து, தெளிவாக ஆராய்ந்து இளையோர், புதியவர்களை தெரிவு செய்கையிலேயே எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தக்கூடியதாக அமையும்.
நான்கு, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அரசியல் குழுக்களில் முன்னாள் போராளிகள் பலரும் களமிறங்கி உள்ளனர். அவர்களுக்கான அங்கிகாரத்தை வழங்குவதில் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளில் முன்னாள் போராளிகள் என்ற விம்பத்துக்குள் புலனாய்வு நெருக்கடிகளால் தொடர்ச்சியாக திறந்த சிறைச்சாலைகளுக்குள் வாழும் நிலைமைகளே காணப்படுகின்றது. அவர்களுக்கான குரல் பொதுச் சமுகத்திலிருந்தோ அரசியல் தரப்பிலிருந்தோ போதியளவில் வருவதில்லை. அவர்களும் பொதுவெளிக்கு வந்து போராடுவதில் நெருக்கடிக்குள் காணப்படுவதால், நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்ந்து கழித்து வருகின்றார்கள். இதயசுத்தியுடன் தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த உயர்ந்த கனவுகளுடனேயே அவர்கள் கடந்த காலங்களில் போராளி என்ற பயணத்தை தெரிவு செய்திருந்தார்கள். இன்று முன்னாள் போராளிகளின் கடந்த கால அர்ப்பணிப்புகள் வரலாறுகளை மறந்து ஒரு சிலரின் தவறான நடத்தைகளால் முழுமையாக அவர்களை பிராந்திய சர்வதேச அரசுகளின் முகவர்களாக பார்ப்பதும் விமர்சிப்பதும் ஏற்புடையதாக அமையாது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் முன்னாள் போராளிகளுக்கு சமுகத்தில் சரியான அங்கீகாரத்தை அளித்து சமுகத்துடன் இணைத்துள்ளீர்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்காக போராடியவர்கள், இன்று தமது இன்னல்களை தனித்து போராட தள்ளப்பட்டுள்ளார்கள். இது தமிழ் மக்களின் தார்மீக ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது தமிழ் மக்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கோரும் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்திற்கும் வலுச்சேர்ப்பதாக அமையும்.
எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் தமிழ் மக்களை அணிகளாக சிதறடித்தாலும், தமிழ் மக்கள் ‘தமிழ்த் தேசியம்’ என்பதில் ஒன்று திரள்வதாக அமைய வேண்டும். சின்னங்கள் கட்சிகளுக்கு பின்னால் இழுபறியடையாது, தமிழ் மக்களின் தேசியத்தை பலப்படுத்தக்கூடிய புதியவர்களையும், இளையவர்களையும் ஆழமாக பரிட்சித்து தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ் சமுகத்திடம் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்து கொள்வதாயின், தமக்கு பொறுப்புக்கூறக்கூடிய அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்வது கடமையாகும். லெனின் கூறுவது போன்று, ‘உனக்கான அரசியலை நீ பேசவில்லையாயின், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’ என்பதுவே நிதர்சனமானதாகும். தமிழ் மக்கள் தமக்கான அரசியலை அடையாளங்காண விழிப்புடன் செயற்படுவதே, போலிகளை களையவும், எதிரிகளை அழிக்கவும் பயனுடைய முயற்சியாகும்.