
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும் தமிழ் தலைவர்கள், எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வார இறுதியில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க, வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த புகைப்படங்களை தமது சுயநல அரசியலுக்காக பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“வடக்கு மாகாணத்தின் சில அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நாட்களில் அனுர குமார ஜனாதிபதியை சந்தித்தனர். சந்தித்தவர்களில் சிலர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான அந்த சாதாரண சந்திப்பை, மக்களை மிகவும் தவறாக வழிநடத்தும் வகையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு வெளியிட்டு, தான் அனுர குமாரவுடன்தான் இருக்கின்றேன் என, சில அறிகுறிகளை காட்டுகிறார்கள். அதனைவிட அடுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்குமென பொய்யுரைக்கின்றனர்.”
வடக்கின் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதாகவும், இது குறித்து தம்மிடம் சாட்சிகள் காணப்படுவதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
“எமக்கு தெளிவான சாட்சி உள்ளது, சில உறுப்பினர்கள், வட மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தின் சில கூட்டங்களில் அடுத்த அமைச்சரவையில் மீன்பிடி அசை்சர் தானே என சிலர் குறிப்பிட்டுள்ளனர் அடுத்த அமைச்சரவையில் நீதி அமைச்சர் அல்லது வெளிவிவகார அமைச்சர் தான் என குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இவ்வாறான விடயங்கள் ஒரு புறத்தில் வெட்கப்பட வேண்டிய செயல். மறுபக்கத்தில் இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் செயல்.”
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த நாட்களில் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
“முன்னாள் அமைச்சர் ஒருவர் நேரம் கேட்டால் தரப்படும். மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் கௌரவத்தை வழங்க வேண்டும். அதற்கமைய ஜனாதிபதி வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு, பெயர் விபரங்களுடன் சொல்வதானால் சிறீதரன், சுமந்திரன் அதன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நேரம் ஒதுக்கி அவர்களை சந்தித்தார், ஜனாதிபதி என்ற அடிப்படையில்.”