
எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும்
என யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகிறேன் என குறிப்பிட்ட மணிவண்ணன்.
ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நாங்கள் செயற்படப் போவதில்லை நாங்கள் பாரத தேசத்தினுடைய உறவுகளாக தொப்புள்கொடி உறவுகளாக அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய ஒரு தரப்பாக நாங்கள் இந்த தேசத்தில் இருப்போம்.
எம்மைப் பொறுத்தவரை பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு நாம் தந்தையர் நாடான பாரத தேசத்தினை பின்பற்றி செயற்படுகின்றோம் அதாவது தாய் தமிழகம் என்பது எமது தொப்புள்கொடி உறவுகளாக உள்ளனர்.
தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும் ஆகவே பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்களுடைய அரசியல் கலாச்சாரத்திலும் பாரத தேசத்தினுடைய அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றோம்
பாரத தேசத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தினை பின்பற்றுகின்றவர்களை அங்கே நினைவு கூருவதை போல இங்கேயும் நினைவுகூரும் பண்பாட்டை பின்பற்றி வருகின்றோம்
குறிப்பாக இன்றைய விஜயதசமி நாளில் அப்துல் கலாமினுடைய நினைவு தினத்தில் பாரத தேசத்திற்கு ஒரு கோரிக்கையையினை முன்வைக்க விரும்புகின்றேன் எமது நீண்டகால உரிமை கோரிக்கையினை பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்
நாம் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல நாங்கள் மற்றய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையினை கோரவில்லை நாங்கள் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மை வளர்த்துக் கொள்ள எமக்கு உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாக போராடி வருகின்றோம்
அந்த வகையில் பாரத தேசம் எமது கோரிக்கையினை நியாயமாக புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்குத் தன்னுடைய முயற்சி, அழுத்தங்களையும் அதனுடைய ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
பாரத தேசம் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம் ஏற்கனவே 13வது திருத்தச் சட்டத்தினை பெற்றுத்தந்தது இந்த பாரத தேசமே அந்த நன்றிக் கடன் எமக்குள்ளது என்றார்.