இலங்கையில் ஜனாதிபதியாக இருப்பவர், பிரதமராக இருப்பவர் தமது நலன்களைப் பேணுபவராக இருக்க வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு வல்லாதிக்க நாடுகளோ விரும்புவது வழமை. ஆனால், இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமக்குச் சேவகம் செய்யக்கூடியதாகப் பாராளுமன்றில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றன.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளில் இருந்தும் பணத்துக்கு மசியக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வெல்லவைத்துப் பாராளுமன்றம் அனுப்புவதற்காகப் பணத்தை தண்ணீராகச் செலவு செய்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் பணத்துக்குத் தமிழ்த்தேசியம் பேசும் வேட்பாளர்கள் சிலரும் சோரம்போயுள்ளனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் சனநாயத் தமிழரசுக் கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் நல்லூரில் கடந்த சனிக்கிழமை (09.11.2024) நடைபெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஒருசில பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வேறுபுத்திஜீவிகள் சிலரும் இணைந்து ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறு ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்தி மக்களைக் கோரியுள்ளனர்.
இவர்கள் மாற்றத்துக்காக மாற்றானுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார்கள். இலங்கைத் தேசியத்துக்குள் தமிழ்த் தேசியத்தைக் கரைத்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாகவே இவர்களது கோரிக்கை அமைந்துள்ளது.
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கான அரசியல் மாற்றம் அல்ல. தமிழின வீரோதத்தைக் கக்கிவந்த ஜே.வி.பி. ஆட்சியதிகாரத்தில் ஏறியவுடன் தங்கள் குணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான திர்வைப் புறம்தள்ளி ஜே.வி.பி மட்டுமல்ல எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியாலும் இலங்கையின் பொருளாதாரத்தை விருத்தி செய்யமுடியாது. எமது புத்திஜீவிகள் ஜே.வி.பிக்கான ஆதரவை மக்களிடம் கோருவதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு ஜே.வி.பிக்கே அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுகளும், அரசியல்வாதிகளின் மதுபான அனுமதிப்பத்திர வியாபாரங்களும் மக்களிடையே தமிழ் அரசியல்வாதிகள்மீது வெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க் கட்சிகள் மீது மக்கள் கொண்டிருக்கும் இந்த அதிருப்தியைத் தென்னிலங்கைக் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக்கி வருகின்றன. தமிழ் மக்கள் எந்தக்காரணத்துக்காகவும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது. எதற்கும் சோரம்போகாத தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட வேட்பாளர்களை அடையாளங்கண்டு அவர்களை வெல்லவைக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.