இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது எண்ணங்களுக்குள் முதன்மையான பிரச்சார சொல்லாக பயன்படுத்தி வருகின்றனர். எவரும் இலங்கை அரசியலின் மாற்றத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே அவர்களது பிரச்சாரங்கள் உறுதி செய்கின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டு தென்னிலங்கையின் இராணுவ போர்வெற்றி, இலங்கை அரசியலில் மாற்றத்தை உருவாக்கியது. இலங்கையின் சிங்கள-பௌத்த பேரினவாத தலைமையை ராஜபக்சாக்களுக்கு வழங்கியது. அதுவரை இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றப்பட்டிருந்த சிங்கள-பௌத்த பேரினவாத தலைமை ராஜபக்சாக்கள் எனும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்அடிப்படை மாற்றத்திலிருந்து, ராஜபக்சாக்கள் குடும்பத்திலிருந்து சிங்கள-பௌத்த பேரினவாத தலைமையை மீட்கும் போராட்டமாகவே 2015, 2019-2020 மற்றும் 2024 தேர்தல்களை தென்னிலங்கை நகர்த்தியிருந்தது. ஆதலாலேயே கடந்த ஒரு தசாப்தமாக அரசியல் ஸ்திரத்தன்மையையும் இலங்கை இழந்துள்ளது.
இந்தபின்னணியை சரியாக பகுப்பாய்வு செய்துள்ள அநுரகுமார திசநாயக்க, ‘மாற்றம்’ என்ற ஜனரஞ்சன வார்த்தையை தேர்தலில் உள்ளீர்க்கையில், அது மக்களை இலகுவாக கவர்ந்துள்ளது. மேலும், தென்னிலங்கையின் ஸ்திரமற்ற தன்மையும் அநுரகுமார திசநாயக்கவை வெற்றி பெறவைத்துள்ளது. அதேவிம்பத்தில் பாராளுமன்றத் தேர்தலையும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அணுகியுள்ளது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டில் உடைக்கப்படும் மாற்றம் சார்ந்த விம்பத்தை அடையாளப்படுத்துவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி-யின் மாற்றம் என்ற தேர்தல் பிரச்சாரத்தின் செயலாக்கத்தினை கடந்த ஐந்து வாரங்களில் சிறியளவில் கூட அடையாளங்காண முடியவில்லை. ஒரு இடைக்கால அரசாங்கம் தீவிரமான பிரச்சினைகளை விரைவாகச் சமாளிக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்ற வாதம் மறுப்பதற்கில்லை. ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில், தங்களிடம் ஊழல்வாதிகளின் கோவைகள் இருப்பதாக கூறிவந்தார்கள். எனினும் தற்போது, ‘ஐந்து வார காலப்பகுதி விசாரணைகளுக்கு போதாது எனவும், ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் போட்ட நாடகத்தை மீள போட முடியாதெனவும்’ காரணங்களை ஒப்புவிக்கின்றனர். வழக்குகளுக்கான ஆதாரங்களை தேடும் செயற்பாட்டை முடுக்கி விட்டுள்ளார்களெனில், தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல் சார்ந்த கோவைகள் இருப்பதாக கூறியமை அப்பட்டமான பொய் என்பதையே உறுதி செய்கின்றார்கள். அவ்வாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும், பழைய விசாரணை கோவைகளை விலக்கி, புதிய விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்து வருகின்றார்கள். தென்பூகோள நாடுகளில் இது ஊறிப்போன அரசியல் கலாச்சாரமாகும். புதிதாக வரும் அரசாங்கங்கள் பழைய அரசாங்கங்களின் அரசியல் செயற்பாடுகளை புறக்கணித்து புதிதாக தமது அரசாங்கத்தில் ஆரம்பிப்பது. இதனூடான அரச நிதியும் வழங்கலுமே வீணடிக்கப்படுகின்றது. இதுவும் ஓர் வகையிலான அரசியல் துஷ்பிரயோகமே அமைகின்றது. இது மாற்றம் பற்றிய பிரச்சாரங்களின் செயலாக்கத் தன்மையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.
பொதுத்தேர்தலில் வாக்கினை அதிகரிப்பதற்காக ஜே.வி.பி, சில கண்ணுக்கு தெரியும் ஜனரஞ்சக செயற்பாடுகளை மாற்றத்தின் அடையாளமாக சுருக்க முற்படுகின்றார்கள். உதாரணமாக அரசாங்க மாற்றத்தின் போது அரச வாகனங்களை மீளப்பெற்று, கொழும்பின் மையப்பகுதியில் நிறுத்தி விளம்பரப்படுத்தினார்கள். மேலும் கடவுச்சீட்டில் இலங்கையின் தொன்மையான அடையாளங்களை பதிப்பு செய்து, புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இளையோர்களிடம் சமுகவலைத்தள செல்வாக்கு பெருகியுள்ள இக்காலப்பகுதியில், இவை அதிகம் இளையோரை கவரும் ஜனரஞ்சக செயற்பாடாக அமைந்திருந்தது. எனினும் இதன் விளைவுகள் என்ன என்பதை எவரும் கேள்விக்குட்படுத்தியிருக்கவில்லை. அரச வாகனங்கள் மீள குறித்த அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறே, புதிய கடவுச்சீட்டு பெறுகையும் இழுபறியிலேயே காணப்படுகின்றது. முதலில் வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெறுகை விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான திகதி பெற வேண்டும். அது ஒரு மாத கால இடைவெளியிலேயே கிடைக்கப்பெறுகின்றது. பின்னர் அக்குறித்த திகதியில் மீள வரிசையில் நின்று கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இது கடவுச்சீட்டு அவசர தேவையுடையோருக்கு அதீத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடந்த செப்டெம்பருக்கு முன்னர் கடவுச்சீட்டை துரிதமாக பெற 25000ரூபா இலஞ்சமாக பெறப்பட்ட நிலையில், ஊழல் ஒழிப்பு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் 50000ரூபா முதல் 100000ரூபா வரை இலஞ்சம் பெறப்படுவதாக அறியக்கூடியதாக உள்ளது. அரசாங்கம் ஜனரஞ்சக காட்சிகளையே முன்னிலைப்படுத்துகின்றது. மாறாக மக்களும் விளைவுகளை சிந்திக்க தவறுகின்றனர். மாற்றம் என்பது நிலையான தாக்கங்களை உடையதாகவும், அத்தாக்கம் மக்களுக்கு சாதகமானதாக அமைகின்ற போதிலேயே அது ஆரோக்கியமான மாற்றமாகும். எனினும் கடந்த ஐந்து வாரங்களில் அத்தகையதொரு நிலையான மாற்றத்தை ஜே.வி.பி-யினர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அவர்களுடைய மாற்றங்கள் வெறுமனவே கவர்ச்சிகர விம்பத்தை காட்டி மக்களை ஏமாற்றும் செயலாக மாத்திரமே அமைகின்றது.
மேலும், எதிர்த்தரப்பில் காணப்படுகையில் விமர்சித்த விடயங்களை, ஆளுந்தரப்பாக இருக்கையில் ஏற்றுக்கொண்டு பயணிக்கும் முரண்நகை அரசியல், இலங்கையின் பாரம்பரியமான அரசியல் கலாசாரமாகவே அமைகின்றது. குறிப்பாக 1994ஆம் ஆண்டு முதலேயே ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையிலிருந்து நிறைவேற்றுத்துறை முறைமையை விமர்சித்துள்ளனர். எனினும் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கையில், அதன் அதிகாரத்தை அதிகரிப்பவர்களாகவும், தொடர்ச்சியாக இருமுறை அவ்அதிகாரத்தை இறுகப்பற்றி பிடிப்பவர்களாகவுமே இருந்துள்ளனர். விதிவிலக்காக மைத்திரிபால சிறிசேனா இரண்டாம் முறை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டிருக்கவில்லை. கோத்தபாய ராஜபக்சா இடைநடுவில் நாட்டை விட்டு ஓடியமையால் இரண்டாம் முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கவில்லை. மகிந்த ராஜபக்சா மூன்றாம் முறையும் முயற்சி மேற்கொண்டு தோற்கடிக்கப்பட்டிருந்தார். எனவே எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிக்கும் விடயங்களை, ஆளுந்தரப்பாக அதனை பாதுகாப்பதும் தொடர்வதும், இலங்கையின் சீரழிந்த அரசியல் கலாhசாரமாகும். இத்தகைய சீரழிவான அரசியல் கலாசாரத்தையே ஜே.வி.பி-யினர் பின்பற்றி வருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான எதிர்த்தரப்பு ஜே.வி.பி-யின் கடந்த கால நிலைப்பாட்டுடன், தற்போதைய ஆளுந்தரப்பு ஜே.வி.பி-யின் நிலைப்பாடு முரண்படுவதனை அண்மைய செய்திகள் உறுதி செய்கின்றது. இதனை நுணுக்கமாக விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஆங்கில ஊடகமொன்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகப் சட்ட விடயங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார, ‘சிவில் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றிய பிரச்சினை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது நம்பகமான புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் இது அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படாது. சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாதபோது, எந்த பிரச்சனையும் வராது’ எனத்தெரிவித்துள்ளார். அடிப்படையில் இந்த கருத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்வதனை உறுதி செய்கின்றது. இது ஜே.வி.பி-யின் யுக்தியான கடந்த கால அரசாங்கங்கள் மீது பழி போடும் செயலின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. ஜனாதிபதி செயலக பணிப்பாளரின் கருத்தை நிராகரிக்காத வகையிலேயே ஜே.வி.பி அரசாங்கத்தின் காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவையும் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வாராந்த அமைச்சரவை மாநாட்டில் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், ‘இது இந்த நேரத்தில் இரத்து செய்யப்படவோ அல்லது திருத்தப்படவோ மாட்டாது. மேலும், இது துஷ்பிரயோகம் செய்யப்படாது. அடுத்த அமைச்சரவை அமைக்கப்பட்டு, நவம்பர்-14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றம் கூடியதும், அரசாங்கம் இந்த சட்டங்களைப் பார்த்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்’ எனத் தெரிவித்துள்ளதாக உயர்மட்ட தகவலாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஜே.வி.பி கட்சியின் முக்கியஸ்தர் பிமல் ரத்நாயக்க தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளமை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றது. மேலும் ஜே.வி.பி கட்சியின் முடிவை உறுதி செய்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் 1979ஆம் ஆண்டு இயற்றப்பட்டது மற்றும் இது முக்கியமாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை கையாள்வதில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதேவேளை 1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி-யினரின் புரட்சியை முடக்குவதற்கும் இச்சட்டம் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் கடந்த கால அரசாங்ககங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பி-யின் போராட்டங்களை முடக்குவதற்கும், போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இவ்அடிப்படையிலே ஜே.வி.பி எதிர்த்தரப்பாக செயற்படுகையில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வீரர்களின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டியும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஜே.வி.பி-யின் காபந்து அரசாங்கத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் எதிர்க்கட்சி உறுப்பினரான 2022-மார்ச் பாராளுமன்ற உரையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மீதான விவாதத்தின் போது, விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் திலீபனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். பாராளுமன்ற உரையில் ஹேரத், ‘கடந்த காலத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த திலீபன் என்ற இளைஞர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார், பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கில் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று எங்களிடம் கூறியது எங்களுக்கு நினைவிருக்கிறது. அன்று நாங்கள் புரிந்து கொள்வோம் என்றார். இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் எங்களிடம் கூறியது’ எனக்குறிப்பிட்டிந்தார். எனினும் இன்று ஆளும் தரப்பாக குறித்த பயங்கரவாத சட்டம் தொடர்பில் புதிய பாராளுமன்றம் சிந்திக்க வேண்டுமென விலகி செல்வது, இலங்கையின் மரபார்ந்த அரசியல் கலாசாரத்தை ஜே.வி.பி தொடர்வதனையே உணர்த்துகின்றது.
இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை கடந்த கால அரசாங்கள் உதறி தள்ளியிருந்தது. அதன் தொடர்ச்சியையே ஜே.வி.பி அரசாங்கமும் செயலாற்ற விளைகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயக விதிகளுக்கு முரணானது என்ற கருத்தின் அடிப்படையிலேயே, 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அதை நீக்குவதற்கான கோரிக்கைகள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் அடுத்தடுத்த அரசாங்கங்கள் அதை இரத்து செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை (PTA) மாற்றி புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கான (ATA) முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், முன்னைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கடுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டுள்ளதாக தமிழ்-சிங்கள சிவில் தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் மேலெழுந்தது. ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியாக இக்கடுமையான சட்டங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகi முன்வைத்திருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில், ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட அடக்குமுறை கட்டளைகளை ரத்து செய்வதாக’ உறுதியளித்துள்ளது. எனினும் அரசாங்க நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டையே சீர்செய்ய வேண்டுமென நிலை மாறியுள்ளது. இது ‘ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதிகாரிகள் ஒன்றுதான். அது சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு ஒன்றேதான்’ என்ற எதார்த்தத்தையே உறுதி செய்கின்றது.
மேலும், பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை புதிய அரசாங்கம் கையாள்வது அதிக நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. பொது பாதுகாப்புத் துறையில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை விசாரிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைக்குரிய குழு அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பிலவை கொச்சைப்படுத்தவே அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இது இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. மக்கள் எதிர்பார்க்கும் முதிர்ச்சியான அரசியலை வெளிப்படுத்த ஜே.வி.பி தவறுகின்றது. முன்னாள் நீதிபதி, ஏ.என்.ஜே. டி அல்விஸ், குழுவிற்கு தலைமை தாங்கினார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க இரண்டு அதிகாரிகளும் தவறிவிட்டனர் என்ற கடுமையான குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல், எந்த சூழ்நிலையிலும் அவர்களை அகற்ற மாட்டோம் என்றும், ஈஸ்டர் ஞாயிறு துயரம் அவர்களின் மேற்பார்வையில் மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த கால அரசாங்கங்களை போன்றே ஜே.வி.பி அரசாங்கமும் ஈஸ்டர் குண்டு தாக்குதலை தனது தேர்தலுக்கான யுக்தியாக பயன்படுத்துகின்றதா எனும் சந்தேகத்தையே அண்மைய செய்திகள் உறுதிசெய்கின்றது. கடந்த ஐந்து வாரங்களாகவும், அதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜே.வி.பி-யின் முதன்மையான பிரச்சாரமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலே காணப்படுகின்றது. எனினும் இதுவரை குறைந்தபட்ச முன்னேற்றத்தைக்கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக அதனை முதன்மைப்படுத்திய அரசியலையே ஜே.வி.பி-யினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, கடந்த மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கை மக்கள் எதிர்பார்த்திருந்த நம்பிக்கையின் வசந்த காலம் விரக்தியின் குளிர்காலமாக மாறுவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. முன்னணிக் கொள்கைக் கவலைகள் என அடையாளம் காணப்பட்ட சில சிக்கல்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன என்பதை தாண்டி கைவிடப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது. அதற்குரிய சான்றாகவே பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான ஜே.வி.பி-யின் முரண்நிலை அமைகின்றது. இது தென்னிலங்கைக்கு சாதகமான அரசாங்க மாற்றமாகவே அமைகின்றது. மாறாக ஜே.வி.பி-யின் செயற்பாடுகளும் இலங்கை இருதேசம் என்பதை மீள மீள உறுதிசெய்யும் பேரினவாத அரசியல் கலாசாரத்தை தொடர்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். இது தொடர்பில் ஈழத்தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.