13 வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூட இல்லை….. சி.அ.யோதிலிங்கம்.

இந்திய வெளி உறவுச் செயலரின் வருகையின் பின்னர். 13 வது திருத்தம் மீளவும்
வாதப்பிரதிவாதங்களைக் கிழப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள் 13 வது திருத்தத்தை
முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற
வேண்டுகோளையும் இந்திய அரசுச் செயலர் விடுத்துச் சென்றமையே இதற்குப் பிரதான
காரணமாகும். 13 வது திருத்தம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக கொள்ள முடியாது
ஆனால் ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளலாம் என்பது சிலரின் வாதம்.
ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு பொறிமுறை ஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்க மாட்டாது
என்பது மறு தரப்பின் வாதம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆரம்பப்புள்ளியாகக் கொள்ளலாம் என்ற கருத்தையே
கொண்டுள்ளது. விக்கினேஸ்வரனின் கட்சியிடமும் அந்தக் கருத்தே இருப்பது போலத்
தெரிகின்றது எனினும் அவரது கூட்டணியிலுள்ள சிவாஜிலிங்கம் ஆரம்பப்புள்ளியாகக்
கூட இருக்கத் தகுதியற்றது என்றே கூறி வருகின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்கத் தகுதியற்றது எனக் கூறி மொத்தமாகவே
நிராகரிக்கின்றது. கஜேந்திரகுமார் அதனை மறைமுகமாக இந்திய வெளியுறவுச்
செயலாளரின் சந்திப்பின் போதும் கூறியிருந்தார். ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தப்
பொறிமுறையையும் இந்தியா அரசியல் தீர்வாக சிபார்சு செய்யக் கூடாது எனக்
கூறியிருக்கின்றார். ஆனால் தேர்தல் நலன்களுக்காக முன்னர் பகிஸ்கரித்த முன்னணி
தற்போது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது.
பொதுமக்கள் மத்தியிலும் இது தொடர்பாக இரண்டு பக்க ஆதரவுக் கருத்துக்களும் உள்ளன.
சாதாரண மக்கள் அனுபவத்தின் அடிப்படையிலேயே பொது முடிவுக்கு வருபவர்களாக
இருப்பதனால் ஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்க மாட்டாது என்பதே
பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக பதவி வகித்த
வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபை , பிள்ளையான் முதலமைச்சராக பதவி வகித்த கிழக்கு
மாகாணசபை,  விக்கினேஸ்வரனின் வடக்கு மாகாணசபை என்பவற்றின் அனுபவத்தைக் கொண்டே
இம்முடிவுக்கு வந்துள்ளனர் எனினும் கணிசமானோரிடம் ஆரம்பப்புள்ளியாகக் கொண்டு
முன்னேறலாம் என்ற கருத்தும் உள்ளது.
13 வது திருத்தம் பற்றி தமிழ்த்தரப்பில் போதிய ஆய்வுகளோ, விவாதங்களோ
புலமை மட்டத்தில் நடந்தது எனக் கூறமுடியாது. கலாநிதி குருபரன் இது பற்றி ஆழமான
கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். இக்கட்டுரையாளரும் “13 வது திருத்தமும் தமிழ் மக்களும்”
என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். சிங்களத்தரப்பில் பலர் ஆய்வு செய்திருக்கின்றனர். அவர்களில் பலருடைய ஆய்வுக்கட்டுரைகள் தமிழிலும் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன.

உண்மையில் 13 வது திருத்தம் பற்றி தெளிவான புரிதல் வேண்டுமாயின் முதலில்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரைபடத்தினை
உருவாக்கி அந்த வரைபடம் 13 வது திருத்தத் சட்டத்துடன் பொருந்துகின்றதா? என்பதை ஆய்வு
செய்து பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது கோட்பாட்டு அடிப்படையில் தமிழ்
மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்தல் ரூபவ் தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரித்தல், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆட்சிப் பொறிமுறையை உருவாக்கல்  என நான்கு பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.  அதேவேளை அரசியல் யாப்பு சட்டவாக்க வடிவத்தில் கூட்டிருப்பை பேணக்கூடிய வடக்கு –கிழக்கு இணைப்பு , சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள்,  மத்திய அரசில் தேசமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறை , சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு
என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். இவை தவிர அந்த அரசியல் தீர்வு தமிழ் மக்களின்
பங்களிப்புடன் உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவை பற்றி முன்னரும் பல தடவை
இக்கட்டுரையாளரினால் கூறப்பட்டுள்ளது.
13 வது திருத்தம் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை. அதன் ஆட்சி
அதிகாரமான இறைமையையும் அங்கீகரிக்கவில்லை. தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியைத்
தாங்களே நிர்ணயிக்கக் கூடிய சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கவில்லை. ஒரு
நாட்டிற்குள் தேசமாக இருப்பதற்கான ஆட்சிப் பொறிமுறை சுயநிர்ணயமுடைய சமஸ்டியே!
அந்த சமஸ்டி ஆட்சி முறை அங்கீகரிக்கப்படவில்லை. எனவே கோட்பாட்டு அடிப்படையில்
13 வது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாகக் கூட கொள்ள முடியாது.
தவிர யாப்பு வடிவத்திலும் தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் ரூபவ் கூட்டடையாளத்தையும்
பேணக்கூடிய வடக்கு – கிழக்கு இணைப்பு ஏற்க்கப்படவில்லை. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு– கிழக்கு தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள் எதுவும் 13 வது திருத்தத்தில் இல்லை. மாகாணசபை
நிரலில் உள்ள விடயங்களில் கூட சுயாதீனமாக மாகாணசபை சட்டங்களை இயற்ற முடியாது.
மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் சம்மதமளித்தால் மட்டும் சட்டங்களை
இயற்ற முடியும். அதிலும் கூட பல விடயங்களில் நியதிச்சட்டங்களை உருவாக்குவதற்கு
பாராளுமன்றம் சட்டங்களை இயற்றிக் கொடுக்க வேண்டும்.
மாகாண நிறைவேற்று அதிகாரம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்.
தலைமையிலான மாகாண அமைச்சரவையிடம் இல்லை. மாறாக மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடமே உள்ளது. மாகாண அமைச்சரவை ஆளுநருக்கு நிர்வாகக் கடமைகளில் உதவி புரிவதற்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த கால மாகாணசபை அனுபங்கள் சுயாதீன அதிகாரங்கள் எதுவுமில்லை என்பதையே
வெளிக்காட்டின. வரதராஜப்பெருமாள் போக்குவரத்து , வீதிகள் தொடர்பாக மாகாணசபை
நிரலில் உள்ள விடயங்களில் சட்டமியற்ற முனைந்த போதும் அனுமதி வழங்கப்படவில்லை.
பிள்ளையான் ஒரு பியோனை நியமிக்கும் அதிகாரம் கூட தனக்கு இருக்கவில்லை என
ஒப்பாரி வைத்திருந்தார். விக்கினேஸ்வரன் முதலமைச்சர் நிதியத்திற்கான சட்டத்தை உருவாக்க
முயன்ற போதும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாகாண பொலிஸ் துறை இதுவரை
உருவாக்கப்படவில்லை.
நீதித்துறை அதிகாரப்பகிர்வுக்கு உள்ளாக்கப்படவேயில்லை. நாடு முழுவதற்குமான
பொதுவான நீதித்துறையே மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளது. மாகாண
மேல்நீதிமன்றம் உருவாக்கப்பட்டாலும் அதன் அதிகாரம் மத்திய நீதித்துறையிடமே
உள்ளது. இத்தனைக்கும் அமெரிக்கா ரூபவ் சுவிஸ்லாந்து போன்ற நாட்களில் நீதித்துறை
அதிகாரப்பகிர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்து. மத்திய அரசில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படவில்லை. சுவிஸ்லாந்தின் இதற்கான பொறிமுறை வலுவாக உள்ளது. இது உருவாக்கப்படாததினால் மத்திய அரசு சிங்கள பௌத்த அரசராகவே உள்ளது. மத்திய அரசை சிங்கள பௌத்த அரசாக வைத்துக் கொண்டு எந்த அதிகாரப்பகிர்வை வழங்கினாலும் அது ஒரு போதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை. மாகாணசபை முறை முறையாக செயற்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அதிகாரங்களுக்கான பாதுகாப்பை பொறுத்தவரை தொடர் துயரமே எஞ்சியுள்ளது.
ஏற்கனவே வரலாற்று ரீதியாக தமிழர் நலன் காக்கவென யாப்பில் இருந்த ஏற்பாடுகளை
வெட்டிக் குறைப்பது அல்லது கணக்கில் எடுக்காமல் விடுவது என்ற போக்கே
பின்பற்றப்பட்டது. சோல்பரி யாப்பின் 29 வது பிரிவு தொடக்கம் வடக்கு கிழக்கு
இணைப்பு ஊடாக 16 வது யாப்புத்திருத்தத்தின் தமிழ் மொழி அரசகருமமொழி வரை இதுவே
நடந்தது. 13 வது திருத்தத்திலும் வெட்டிக் குறைத்தல் , கணக்கக் கெடுக்காமல் விடல் என்கின்ற இரண்டு அணுகு முறைகளும் ஒருங்கே பின்பற்றப்பட்டன கொள்கை உருவாக்கம் என்ற
பெயரிலும் , பாராளுமன்றச் சட்டம் என்ற பெயரிலும் மாகாணசபை நிரலிலுள்ள பல
அதிகாரங்கள் பிடுங்கப்பட்டன. சில அதிகாரங்கள் சூட்சுமமாக பிடுங்கப்பட்டன. மாவட்ட
வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் , மாகாண பாடசாலைகளை தரமுயர்த்தி
தேசியப்பாடசாலைகள் என்ற வகையில் பிடுங்குதல் என்பதெல்லாம் சூட்சுமமாக
நடந்தேறின.

மாகாணசபை முறையே ஒரு எலும்புக்கூடு தற்போதைய நிலையோ செல்லரித்த
எலும்புக்கூடு. இதனைத்தான் தமிழ் மக்களின் கைகளில் கட்டி விட இந்தியா முனைகின்றது.
13 வது திருத்த உருவாக்கச் செயற்பாட்டில் தமிழ் மக்கள் பங்கேற்கவில்லை. இந்தியா
பலவந்தமாக தமிழ் மக்களின் சார்பில் பங்கேற்றது. எனவே அதற்கான பொறுப்பு
இந்தியாவிற்கு தான் உள்ளது. ஆனால் இந்தியா நம்பிக்கைப் பொறுப்புடன்
செயற்படவில்லை. மேற்கூறிய அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட போது இந்தியா
பாராமுகமாக இருந்தது. தற்போது மட்டும் தமிழ் மக்களை ஒருங்கிணைந்து குரல் கொடுங்கள்
என்று கூறி நழுவப்பார்க்கின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக இல்லாத
ஒன்றிற்காக பொறுப்புடமை தமிழ் மக்களுக்கு இல்லாத எப்படி ஒருங்கிணைந்து குரல்
கொடுக்க முடியும்? 13 வது திருத்தத்திற்காக தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பது அவசியம் அற்றது. அதனை இந்தியா பார்த்துக் கொள்ளட்டும். உண்மையான அரசியல் தீர்விற்காக மட்டும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இதற்காக மாகாணசபை முறையை நிராகரிக்க வேண்டும் என்றும் கூற வரவில்லை. அது ஏற்கனவே யாப்பில் உள்ள விடயம். அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதை அதனை உருவாக்கிய இலங்கை அரசும் , இந்திய அரசும்
தான் பார்த்துக் கொள்ள வேண்டும்

Recommended For You

About the Author: Editor Elukainews