சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஆகியோருக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் குழுவான சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் (Sri Lanka Campaign for Peace & Justice) கோரிக்கை விடுத்துள்ளது.

கொடூரமான போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், போர்க்குற்றங்கள் உட்பட நீண்டகால மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து தண்டனையின்மையை அனுபவித்து வருவதாக அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

சவேந்திர சில்வா போன்ற போர்க்குற்ற குற்றம் சாட்டப்பட்ட சில இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்கா உலகளாவிய மெக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளது என்பதை வலியுறுத்தும் குறித்த அமைப்பு, பொறுப்புக்கூறலுக்கான உலகளாவிய இயக்கத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நீதி வழங்குவதற்கு ஆதரவளிக்கவும் பிரித்தானியாவுன்னு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

“ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் சாட்சியங்களைப் பாதுகாத்தல் மற்றும் நீதியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றன, ஆனால் சர்வதேச அழுத்தம் இல்லாமல், இந்த முயற்சிகள் தடைபடும் அபாயம் உள்ளது.” என சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மேலும் தெரிவிக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews