மிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை முன்வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் நீண்டகால விருப்பமான தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு மிகவும் வலுவான சந்தர்ப்பம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பொதுத் தேர்தலில் 65,458 வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வெற்றி பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், புதிய அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வழங்கும் தீர்வுகள் குறித்து ஜனாதிபதி நேரடியாகக் குறிப்பிடவில்லை என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
“நேரடியாக தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பிலோ நேரடியாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாகவோ அதிகாரப் பகிர்வு தொடர்பிலோ பொறுப்புக்கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தொடர்பிலோ சொல்லவில்லை. ஆனால் கடந்த காலத்திலே ஜனாதிபதிகள் இவ்வாறான விடயங்களை செய்தியில் சொல்லியிருந்தாலும் கூட நடைமுறையில் எதனையும் செய்யவில்லை.”
பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு 11,215 வாக்குகளைப் பெற்று முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட துரைராசா ரவிகரன், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“கூடுதலாக எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தொடர்பில் கூடுதலான கருத்துகள் சொல்லப்படவில்லை. இருந்தாலும் மிகக்கூடிய விரையில் ஜனாதிபதி அவர்களையும் பிரதமர் அவர்களையும் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பதற்கு நேரம் கேட்பதற்கு இருக்கின்றோம். இதன்போது எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவோம்.”
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, 5,695 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்க விரும்புவதாக தெரிவித்ததோடு, இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“புதிய ஜனாதிபதியின் உரை வரவேற்கத்தக்கது. விவசாயம், மீன்பிடித் துறையில் அவரு கவனம் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. இருந்தும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தை அவர் கதைக்கவில்லையே என்ற கவலை இருக்கின்றதே ஒழிய மற்றப்படி அவரது உரையிலே இந்த நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான உரையாக இருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாரா இருக்கின்றோம்.”
நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் உறுதியளித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இலங்கையில் சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதாக நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
மக்களின் நீண்டகால விருப்பமான தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு மிகவும் வலுவான சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் இனவாத அரசியலோ அல்லது மத தீவிரவாதமோ மீண்டும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் எனவும் வலியுறுத்தினார்.
“இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை. ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக இனவாத, மதவாத, கோஷங்களை எழுப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என நான் உறுதியளிக்கிறேன்.”
சட்டத்தின் மீது மக்களின் உடைந்த நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாரையும் பழிவாங்கும் எண்ணமோ, யாரையும் துரத்தி வேட்டையாட வேண்டுமென்ற நோக்கமே இல்லையெனவும், சுதந்திரமாக அரசியல் செய்யும் உரிமையை அனைவருக்கும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குற்றச் செயல்கள் ஏராளம் எனக் கூறிய ஜனாதிபதி, சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் மீள விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
சர்ச்சைக்குரிய குற்றங்களுடன் தொடர்புடைய பிரதிவாதிகள் அம்பலப்படுத்தப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் உறுதியளித்தார்.
“இந்த மக்கள் ஆணையில் அந்த நோக்கம் உள்ளது. அந்த ஒப்பாரி உள்ளது. இந்த மக்கள் ஆணையில் தமது இறந்த தமது உறவினரின் வெளிப்பாடு உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நண்பர்களின் ஒப்பாரி இந்த மக்கள் ஆணையில் இருக்கிறது. அவர்களுக்கு நாம் நியாயத்தை நிலைநாட்டாவிட்டால் யார் நிறைவேற்றப் போகிறார்கள். யாருக்குப் பொறுப்புக் கொடுக்க முடியும்? அவற்றை நிறைவேற்றாவிட்டால் நீதி,நியாயம் தொடர்பிலான கனவுகள் இந்த நாட்டில் மடிந்து போகும். கனவில் கூட நீதி, நியாயம் தொடர்பான எதிர்பார்ப்பு நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படும் என நினைக்கவில்லை. அதனால் நீதி, நியாயம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.”
குற்றம் மற்றும ஊழல் மோசடி தொடர்பான சட்டத்தை நிறைவேற்றி, சட்டத்தின் மேலாதிக்கத்தையும், சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாக்க மேலும் குறிப்பிட்டார்.