லண்டனிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரத்தைச் சேர்ந்த சங்கர் விஜயசுந்தரம் என அடையாளம் காணப்பட்ட 43 வயதுடைய நபர், நவம்பர் 30 ஆம் திகதி பாரிஸில் இருந்து வந்திறங்கிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று பிரித்தானியக் குடியுரிமை பெற்ற விஜயசுந்தரம், இலங்கையில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய இராச்சியத்தில் நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள அமைப்பின்
உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்று, 2012 மே 31ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை அறிக்கை செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பயணத் தடை விதிக்கப்பட்டது. இந்த பயணத் தடையை அறியாத சந்தேக நபர் இலங்கை திரும்பியதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, கொழும்பு குற்றப்பிரிவினர் விஜயசுந்தரத்தை தங்களுடைய காவலில் எடுத்துக்கொண்டனர்.
பருத்தித்துறையில் மரணமான தனது தாயாரான யோகேஸ்வரியின் இறுதிக் கிரிகைகளை மேற்கொள்வதற்காக சங்கர் லண்டனிலிருந்து வந்ததாகத் தெரியவருகின்றது.