அதிவேக நெடுஞ்சாலைகளில், அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் உள்ள கட்டண கூடங்களில் கைகளால் பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெறும் போது, காசாளர் பற்றுச்சீட்டை கையளிப்பதற்கு சுமார் 12-15 வினாடிகள் செல்கின்றன.
இலத்திரணியல் கட்டண முறையை பயன்படுத்தும்போது, 6 வினாடிகளில், அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்களுக்கு வெளியேற முடியும்.
எனவே, நெடுஞ்சாலை பயனாளர்கள் முற்கொடுப்பனவு அட்டை முறையைப் பயன்படுத்துவது சிறந்தது இந்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம், நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மாத்திரம் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு கட்டண அறவீட்டு நிலையங்களை, கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்ற நிலையம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகள் என்பவற்றிலும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.