ரணிலின் பாதச் சுவட்டைப் பின்பற்றும் அனுரா….! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம்

அனுரா அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் 2|3 பெரும்பான்மையைப் பெற்று சிம்மாசனப் பிரசங்கத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை இரண்டு வெற்றிகள் எதிர்பார்க்காதவை. ஒன்று வடக்கில் அதிக ஆசனங்களைப் கைப்பற்றி முதன்மை இடத்தை பெற்றுக் கொண்டமை. இரண்டாவது பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்றமை. இந்த இரண்டு வெற்றிகளையும் தாம் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுரா இந்தியத் தூதுவருடனான சந்திப்பின்போது இந்தியத் தூதுவரிடம் தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் இந்த வெற்றிகள் இரண்டும் அரசாங்கத்திற்கு முள்போல குத்தவும் கூடும்.
இலங்கையைப் பொறுத்தவரை உச்ச வெற்றி பெற்றவர் குறுகிய காலத்தில் வீழ்ந்து போனதே வரலாறாக உள்ளது. 1956ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் மக்கள் ஐக்கிய முன்னணி உச்ச வெற்றி பெற்றது. பண்டார நாயக்கா   “பஞ்ச பல வேகய”  என அழைக்கப்படுகின்ற சிங்கள விவசாயிகள்இ சிங்கள தொழிலாளர்கள்இ சிங்கள ஆயுள் வேத வைத்தியர்கள் சிங்கள மொழிமூல ஆசிரியர்கள்இ பௌத்த மத குருமார்கள் என்போரை திரட்டி பெரு வெற்றியை பெற்றார். இந்த வெற்றி மௌனப் புரட்சி என அழைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களுடன் சுருங்கிப் போனது. எதிர்க்கட்சித் தலைமை ஸ்தானத்தைக் கூட அதனால் கைப்பற்ற முடியவில்லை. லங்கா  சமசமாஜக் கட்சி எதிர்க்கட்சி தலைமையைக் கைப்பற்றியது. டாக்டர் N.ஆ.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார.;
பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். உள்நாட்டுக் கொள்கையிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் அந்த மாற்றங்கள் தெரிந்தன. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தனியார் கம்பனிகள் வங்கிகள்இ ஆயுள் காப்புறுதிக் கூட்டுத் தாபனம் என பல நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. திருகோணமலையிலும் கட்டுநாயக்காவிலும் இருந்த பிரித்தானியாவின் படைத்தளங்கள் அகற்றப்பட்டன. மேற்குலக சார்பு வெளிநாட்டுக் கொள்கை கைவிடப்பட்டு இந்தியாவுடன் இணைந்து அணிசேராக் கொள்கை பின்பற்றப்பட்டது.

கம்யூனிச நாடுகளுடனும் உறவுகள் பேணப்பட்டன. அவற்றின் தூதுவராலயங்கள் இலங்கையில் திறக்கப்பட்டன.
உச்ச வெற்றி பெற்றவர்கள் வாக்குறுதிகளின் கைதியாவது வழக்கம். பண்டாரநாயக்காவும் வாக்குறுதிகளின் கைதியானார். ஆனால் யதார்த்தம் வேறாக இருந்தது. தமிழரசுக் கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாக பண்டாரநாயக்கா பண்டா -செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். பின்னர் பௌத்தப்பிக்குகளின் எதிர்ப்பினால் அதனையும் கிழித்தெறிந்தார.; 1958 இல் முதலாவது இனக் கலவரம் ஏற்பட்டது. அதனை இனக் கலவரம் என்று கூறுவதை விட இன அழிப்பு என்பதே பொருத்தமானது. இறுதியில் ஐக்கிய முன்னணியையும் அவரால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. இடதுசாரிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர். 1959ம் ஆண்டு பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். முதலாவது உச்சவெற்றி 3 வருடங்களிலேயே வீழ்ச்சியில் முடிந்தது.
இரண்டாவது உச்சவெற்றி 1970 இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கூட்டணிக்கு கிடைத்தது. மொத்தம் 159 ஆசனங்களில் 116 என 2ஃ3 பெரும்பான்மையை முதன்முதலாகப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பெரு வெற்றியின் சகுனமோ என்னவோ ஒரு வருடத்திற்குள்ளேயே ஜே.வி.பி.யின் ஆயுதப் புரட்சியை சந்தித்தது. பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாணம் கோட்டைக்கு சிறிமா கொண்டுவரப்பட்டார். இறுதியில் இந்தியாவின் உதவியுடன் ஆயுதப் புரட்சியை தோற்கடித்து ஆட்சியை பாதுகாத்தார். தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து யாப்பு ரீதியாகவே தூக்கி வீசிய 1972 ம் ஆண்டு யாப்பை அறிமுகப்படுத்தினார். யாப்பு ரீதியாகவே அரச அதிகாரக் கட்டமைப்பு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டது. தேசியக் கொடியின் நான்கு மூலைகளிலும் அரச இலைகள் முளைத்தன. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை காலவரையறையின்றி சிறையில் அடைத்தார். உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக இறக்குமதி கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார். பெருந்தோட்டங்களை தேசியமயமாக்கினார். நாட்டில் பசியும் பட்டினியும் தாண்டவமாடியது. காலை 4 மணிக்கு எழுந்து பாண் வாங்குவதற்காக கியூவில் நிற்க வேண்டிய நிலையும் உருவானது. உடைகளுக்கு மட்டுமல்ல உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. பல்கலைக்கழக அனுமதியில் மொழிவாரித்தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி காவு கொள்ளப்பட்டது. தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு விதைகள் தூவப்பட்டன.


ஐந்து வருடங்களிலேயே கூட்டணி அரசாங்கம் உதிர்ந்தது. முதலில் லங்கா சமசமாஜக்  கட்சியினரும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். இறுதியில் 1977 தேர்தலின் போது படுதோல்வியடைந்தது. 8ஆசனங்கள் மட்டும் அதற்கு கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைமையைக் கூட கைப்பற்ற முடியவில்லை. எதிர்பாராத வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார். இரண்டாவது உச்சவெற்றி 7 வருடங்களில் வீழ்ச்சி அடைந்தது.
3வது உச்சவெற்றி 1977ம் ஆண்டு தேர்தலில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்தது. 5ஃ6 பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியைக் கைப்பற்றினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய அரசியல் யாப்பாக இரண்டாவது குடியரசு யாப்பினை அறிமுகப்படுத்தினார். விகிதாசாரத்தை கணக்கில் கொண்டு தனது ஆட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தலையும் அறிமுகப்படுத்தினார். 5ஃ6 பெரும்பான்மையை தொடர்ச்சியாகத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் தீர்ப்பு தேர்தல் மூலம் பாராளுமன்றத்தின் கால எல்லையையும் இன்னோர் பதவிக்காலத்திற்கு நீடித்தார்.
உச்ச வெற்றி பெருமிதத்தில் பிராந்திய யதார்த்தத்தையும் புறக்கணித்து அமெரிக்காவுடன் கைகோர்த்தார். அமெரிக்க நலன்களுக்கு இலங்கையில் குடை விரிக்கப்பட்டது. தமிழர்களைப் பார்த்து போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என கர்சித்தார். 1977 இலும்இ 1983 இலும் இனக் கலவரங்களை தூண்டினார். இறுதியில் இந்தியாவிடம் முகம் குப்புற விழுந்தார். இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆயுத உதவிகளையும்இ பின்தள வசதிகளையும் செய்து கொடுத்தது. இந்தியாவுக்கு பணிவதைத் தவிர வேறு தெரிவு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு இருக்கவில்லை. இந்தப் பணிவு 1987 இல் இந்திய நலன் சார்ந்த இலங்கை  – இந்திய ஒப்பந்தத்திற்கு வழிவிட்டது. ஒப்பந்தத்தோடு வீழ்ச்சியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று வரை மீழௌ முடியவில்லை. பழம்பெரும் கட்சி 2020 தேர்தலில் ஒரு தேசியப்பட்டியல் ஒரு ஆசனத்துடன் மட்டும் சுருங்கிக் கொண்டது. மூன்றாவது உச்ச வெற்றி படுபாதாளத்தில் விழுந்தது.

  நான்காவது உச்சவெற்றி யுத்தவெற்றி கதாநாயகன் மகிந்தருக்கு 2010 இல் கிடைத்தது. இந்த வெற்றியை அவர் மன்னராட்சியில் உள்ள மன்னர் போல அனுபவிக்க எண்ணினார். மன்னராட்சியில் சட்டஇ நிர்வாகஇ நீதி அதிகாரங்கள் அனைத்தும் மன்னரிடமேயிருக்கும். அதேபோல அவர் அதிகாரங்களை பயன்படுத்த முனைந்தார். எந்த தார்மீக நெறிகளுக்கும் அவர் கட்டுப்படவில்லை. நாட்டைத் தனது சொந்தச் சொத்து போல நினைத்து கொள்ளையடித்தார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை விலக்கீடு வழங்கப்பட்டது . இவரது ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புப் பேரவைக்கு  பீடித்த துரதிஸ்டம் போல எதற்கும் இருக்கவில்லை. தன்னுடைய அதிகாரத்திற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக 18-வது யாப்புத் திருத்தத்தை கொண்டு வந்தார். அரசியலமைப்பு பேரவை எந்தவித அதிகாரமும் இல்லாத பாராளுமன்றப் பேரவையாக மாற்றம் கண்டது. சுயாதீன ஆணைக் குழுக்கள் ஜனாதிபதியின் பொம்மை ஆணைக் குழுக்களாக சிதைந்து போயின. பிராந்திய யதார்த்தத்தை மீறி இலங்கைத் தீவில் சீனாவுக்கு கம்பளம் விரிக்கப்பட்டது. புவிசார்இபூகோள அரசியல்காறர்களின் போட்டிக் களமாக இலங்கை மாறுவதற்கு அத்திவாரம் இடப்பட்டது.
2015 இல் யுத்த வெற்றிக் கதாநாயகனின் கனவுகள் அழிந்து போயின . இந்தியாவும் மேற்குலகமும் தன்னை தோற்கடித்து விட்டன என விகாரைகளில் ஒப்பாரி வைத்தார். போரில் உலக நாடுகள் மகிந்தருடன் இணைந்து புலிகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டன. அப்போது இந்திய ஊடகவியலாளர் ஒருவர் மேற்குலக இராஜதந்திரி ஒருவரிடம் “உங்களுடைய தராண்மை அரசியலுக்கு பிரபாகரன் ஒத்துவரவில்லை என்பதற்காக அழிக்க முற்படுகிறீர்கள் மகிந்த ராஜபக்ச அதற்கு ஒத்து வருவாரோ? என கேட்டாராம். அதற்கு அந்த இராஜதந்திரி கூறிய பதில்  “பிரபாகரனை மகிந்தர் பார்க்கட்டும் மகிந்தரை நாங்கள் பார்க்கின்றோம்” என்பதாக இருந்தது. புலிகளின் நிர்வாகத்தில் இருந்து பறிக்கப்பட்ட கொள்ளைகளுக்கு கணக்கேதும் இல்லை. புலிகளின் வங்கிகளில் ரசீதுகளிடம் இருந்த நகைகளும் மக்களிடம் மீள் கொடுக்கப்படவில்லை. ஆட்சி அதிகாரம் என்பது கொள்ளையடிப்பதற்கு கிடைத்த லைசன்ஸ் என்றே அவர்கள் கருதியிருந்தனர். தார்மீக அறநெறிகள் இங்கு மருந்துக்கு கூட கணக்கெடுக்கப்படவில்லை.
ஐந்தாவது உச்சவெற்றி 2020இல் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்தது. 2ஃ3 பெரும்பான்மையையும் கோத்தா தேவையான போது  பெற்றுக்கொண்டார். “வியத்;கம்” குழுவின் ஆலோசனையைத் தவிர வேறு எவரது ஆலோசனைகளும்  அவருக்கு மந்திர வாக்குகளாக இருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அவரது வெற்றிக்கு துணை புரிந்தது. சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டும் வெற்றியடைந்ததை அவர் பெருமையாக கூறினார். சுpங்கள – பௌத்த தேசிய வாதத்தை உச்ச வகையில் கடைப்பிடிக்கும் அரசாக அது காட்சியளித்தது. கட்டமைப்பு சார் இன அழிப்பு பல வழிகளினாலும் அரங்கேற்றப்பட்டது . தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தொல்லைத் திணைக்களமாக மாறியது. படையினர் ஆக்கிரமிப்புகளை ஒரு வேலைத் திட்டமாகவே முன்னெடுத்தனர். நீதிமன்றத் தீர்ப்புக்களையோஇ ஜனாதிபதியின் ஆணைகளையோஇ எழுத்திலுள்ள சட்டங்களையோ ஒரு பொருட்டாக அவர்கள் கணக்கெடுக்கவில்லை. மீண்டும் 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரம் பலப்படுத்தப்பட்டது.
மறுபக்கத்தில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பலவீனமடைந்து வந்த பொருளாதாரம் இவரது ஆட்சிக் காலத்தில் வங்குரோத்துப்  பொருளாதாரமாக மாற்றமடைந்தது. நாடு வங்குரோத்தாக மாறியுள்ளது என பிரகடனம் செய்யப்பட்டது. உணவுப் பொருட்களுக்கும்இ எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. “அரகலய” போராட்டம் “முறைமையை மாற்றுவோம்” என்ற கோ~த்துடன் எழுச்சியடைந்தது. கோத்தா நாட்டை விட்டே ஓடினார். இந்தச் சூழலை நன்கு பயன்படுத்தி ரணில் அதிகாரத்திற்கு வந்தார். பொருளாதார மீட்பராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சர்வரோக நிவாரணையாக சர்வதேச நாணய நிதியமே உள்ளது எனக் கூறினார். நாடு முழுமையாக அதனிடம் சரணடைந்தது.
ரணில் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைத்து ஒரு சூத்திரத்தை வரைந்தார்  “சர்வதேச நாணய நிதியம் விரும்பாததை நாம் மேற்கொள்வோமாயின் பொருளாதார செயற்பாட்டிலிருந்து  சர்வதேச நாணய நிதியம் விலகும்.  அது விலகினால் நாடுகளோ சர்வதேச நிதி நிறுவனங்களோ எமக்கு எந்த உதவிகளும் செய்ய முன்வர மாட்டா. மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டிய நேரிடும்  ” என்பதே சூத்திரமாகும். நாடு சர்வதேச நாணய நிதியம் ஆட்சி செய்கின்ற நாடாக மாறியது.
தற்போது மீண்டும் ஒரு உச்சவெற்றி ஆறாவது வெற்றியாக அனுரகுமார திசநாயக்காவுக்கு கிடைத்ததுள்ளது  . இந்த வெற்றி நீடிக்குமா என்பதற்கு காலம் தான் பதில் கூறும். நுணுக்கமாக பார்ப்பின் நாட்டின் யதார்த்தம் அனுராவின் கொள்கைகளுக்ககோ தேர்தல் வாக்குறுதிகளுக்கோ ஏற்றதாக இல்லை அனுரவின் கொள்கைகளுக்கும் நடைமுறை யதார்த்தத்திற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. அதேபோல தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அதனை செயல்படுத்தக்கூடிய நடைமுறை சூழலுக்குமிடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. அவர்கள் முன்வைத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் சூழல்  இல்லை.
அனுர அரசாங்கம் பொருளாதார நெருக்கடிஇ புவிசார் – பூகோள அரசியல் நெருக்கடிஇ ஆட்சியியல் நெருக்கடிஇ இன பிரச்சினை என்கின்ற ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நான்கு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. இந்த நெருக்கடிகள் காரணமாக ரணில் அரசாங்கத்தின் கொள்கைகளையும் நடைமுறை திட்டங்களையும் பின்பற்றுபவராகவே காட்சியளிக்கின்றார். இராமர் காட்டிற்கு சென்ற பின் பரதன் இராமரின் பாதணிகளை வைத்து ஆட்சி நடத்தியது போல ரணிலின் பாதனிகளை வைத்து ஆட்சி நடத்தும் ஒருவராகவே அனுரா மாறி உள்ளார்.
அனுரா சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்து வரும் வாரங்களில் விரிவாக பார்ப்போம்

Recommended For You

About the Author: Editor Elukainews