தேசிய மக்கள் சக்தியை பிரதான கொள்கை வகுப்பாளரும் ஜனதா விமுத்தி பெரமுனாவின் பொதுச் செயலாளருமான ரில்வின் சில்வா அண்மையில் தெரிவித்த கருத்துக்களை முதலில் நோக்குவது பொருத்தப்படானது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு அதன் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தின் முன்மொழிக்கப்பட்ட மாகாண சபை முறைமை முடிவுக்கு கொண்டுவரவும் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகின்ற போது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை தோற்றுவிக்காத வகையில் அரசியல் ரீதியான தீர்வு திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும். மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்வு எட்டப்படவில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழல் காணப்பட்டது. புதிய அரசியல் அமைப்பு ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13 வது திருத்தம் அல்லது மாகாண சபை முறைமை தேவைப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து ஆரோக்கியமானதாக இலங்கை தீவை கட்டுவதற்கு உதவுமாக இருந்தால் அதனை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் நிராகரிக்கமாட்டார். ஆனால் அவரது கருத்தில் இரு பிரதான விடயங்கள் முன்வைக்கப்படுகிறது. ஒன்று அதிகார பகிர்வு சார்ந்த விடயம். இரண்டு சமத்துவம் பற்றிய உரையாடல். இவை இரண்டுமே வேறு வேறுபட்ட கோட்பாட்டு ரீதியான விளக்கங்களை கொண்டவை. அதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
இலங்கைத் தீவில் மாகாணசபை என்பது அதிகாரப் பகிர்வின் அடையாளமே. அது பலவீனமாக இருக்கின்றது என்பதை கடந்து அதன் புரிதல் அதிகாரப்பகிர்வேயாகும். அதிகார பகிர்வு என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழுகின்ற ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்கள் தங்களுக்கிடையிலே ஏற்படக்கூடிய முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ள அதிகாரங்களை சரியான முறையில் பங்கீடு செய்து கொள்கின்ற செய்முறையைக் குறிப்பதாகும். அதாவது தேசிய இனங்கள் தமது தேசிய அடையாளத்தை முன்னிறுத்திக் கொண்டு அத்தகைய தேசிய அடையாளங்களில் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறையாக அதிகாரத்தின் பங்கீட்டை கருதுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உலகளாவிய ரீதியில் இன முரண்பாடுகளுக்குரிய தீர்வுகளை அதிகாரபகிர்வு என்ற அடிப்படையில் பல்வேறு செய்முறைகளுக்கு ஊடாக தீர்வு கண்டுள்ளது. அதில் மிக உச்சமான ஒரு தீர்வாக தேசிய இனங்கள் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரியமாக வாழும் நிலப்பகுதியை அடையாளப்படுத்தி தனியரசாக பிரிந்து செல்கின்ற செய்முறை ஒன்றாகும். அதனை விட சமஸ்டி கூட்டு சமஸ்டி அரைகுறை சமஸ்டி போன்ற செய்முறைகளுக்கு ஊடாகவும் உலக நாடுகளில் இன முரண்பாடுகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இதனை முதன்மைப்படுத்துகின்ற போது ஏனைய கோட்பாடுகளை விட மார்க்சிய கோட்பாட்டை அடியொற்றிய சோஸலிசவாதிகளும் தேசியங்களின் பிரச்சனைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வை அதிகம் முதன்மைப்படுத்துகின்றனர்.
அதில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஐரிஸ் விடுதலைப் போராட்டம் பற்றி மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் போன்றவர்களுடைய கருத்துக்கள் வலிமையானவையாக காணப்பட்டன. ஐரிஸ் விடுதலை என்பது பிரித்தானியாவின் எல்லைக்குள் கரைந்து போகாமல் அதன் தனித்துவத்தோடு அடையப்பட வேண்டிய ஒன்று என்று விவாதித்தார் மார்க்ஸ். அதனை முதன்மைப்படுத்தகின்ற போது ஐரிஸ் தேசிய இனத்தவர் சர்வதேசியமாக மாறுவதற்கு முன்னர் தேசியமாக இருக்கும் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட என மார்க்ஸ் குறிப்பிட்டார். அதாவது தேசியத்தின் எல்லையில் இருந்து கொண்டு சர்வதேசியத்தின் அளவீட்டில் அல்லது எல்லையில் இணைக்கப்பட வேண்டும் என்று தனது பிரகடனங்களில் முன்வைத்தார். தேசியமாக இருந்து கொண்டே சர்வதேசியமாக பயணிக்க முடியும் என்ற விவாதத்தை மார்க்ஸ் முன்வைக்கிற போது அதனை வழிமொழியும் விதத்தில் பின்வந்த லெனினும் குறித்துரைத்தார்.
தேசியமின்றி தேசிய வாதமின்றி சோஸலிசம் இல்லை என்ற அடிப்படையில் வர்க்கப் போராட்டம் பற்றிய எண்ணங்களையும் கருத்துக்களையும் லெனின் முதன்மைப்படுத்தி இருந்தார். ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ஒரு தேசியமாக அதன் விளைவான தேசியவாதமாக அடையாளப்படுத்திக் கொண்டே இலங்கை தேசியத்தின் அங்கமாவது என்பதே சோஸலிச கோட்பாடுகளின் புரிதலாக உள்ளது. இதனால் இலங்கை தீவினுடைய இலங்கை தேசியத்துக்குள் ஈழத் தமிழர்கள் தமது தேசியத்தின் எல்லையில் இருந்து கொண்டு செயல்பட முடியும். அதனை மாக்ர்கிஸ மரபில் வந்த அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன்மொழிகின்றன.
இலங்கைத் தீவில் அதிகார பகிர்வு என்பது பல்வேறு கட்டங்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டா செல்வா உடன்படிக்கையிலும் டல்லி-செல்வா உடன்படிக்கையிலும் இலங்கைக்கு இந்திய உடன்படிக்கையிலும் ஒரு சீரான வளர்ச்சி போக்கொன்றை அடையாளப்படுத்தியுள்ளது. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் தனி ராஜ்யங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இலங்கை தீவு மாகாணங்களுக்கு ஊடாக பிணைக்கப்படுகிறது. இவ் மாகாண செய்முறை அதிகாரத்தை பகிர்வதற்கான நியமமாக இலங்கை இந்தியா உடன்படிக்கை வழிவகுத்தது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரி நிலமாக காணப்படுவதோடு அன்னிலத்தில் நீண்ட இருப்பையும் பொருளாதாரத்தையும் மொழியை உள்ளடக்கிய பண்பாட்டையும் கலாசார மரபுகளையும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் பொருளாதார சமூக இருப்பு கட்டமைக்கப்படுள்ளது. இதன் இருப்புக்கான அங்கீகாரமே அதிகாரமாகும். இலங்கை தீவில் உள்ள இரு பிரதான தேசியங்களும் தங்களுக்கிடையே அதிகார பங்கீடு செய்து கொள்வதன் ஊடாக இலங்கை தீவின் தேசிய இருப்புக்கான செய்முறை சாத்தியமானதாகும்
இரண்டாவது சமத்துவம் பற்றிய உரையாடல் முக்கியமானதாக காணப்படுகிறது. 1789 ஆம் ஆண்டு பிரான்சில் நிகழ்ந்த புரட்சி ஒன்றிலே சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற கோட்பாட்டு முழக்கம் எழுச்சி பெற்றது. அங்கு முன்வைக்கப்பட்ட எழுச்சிக்கான அத்தகைய சுலோகம் கோட்பாட்டு வாதிகளால் முன்வைக்கப்பட்டு ஐரோப்பிய சமூகங்களுக்கு இடையே நிலவிய பாரபட்சங்களையும் வளப்பங்கீட்டின் சமமின்மையையும் முடியாட்சி முறைக்கு எதிரான அம்சங்களையும் முடிபுக்குக் கொண்டுவர பிரஞ்சு புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்தகைய புரட்சிகள் முன்வைக்கப்பட்ட சமத்துவம் என்பது வளங்களை பாரபட்சமின்றி சமமாக பங்கீடு செய்வதற்கான செயல்முறையை பிரதிபலிப்பதாக இருந்தது. அதனை சோஸலிஸ்ட்டுகள் முதன்மைப்படுத்தியதோடு அவர்களது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சமமான வளப் பங்கீட்டை வர்க்க அடிப்படையில் அனுப்பவிப்பதாக அமைந்திருந்தது. அதற்கான அடிப்படை சோஸலிஸ்ட்டுகள் வர்க்க போராட்டத்தையும் போராட்டத்தில் நிலவக்கூடிய வாய்ப்புகளையும் பற்றியே முதன்மைப்படுத்தியிருந்தார்கள். இத்தகைய வேறுபாடுகளை களைவதற்கு சமமான வளப்பங்கீடு அவசியம் என்ற விவாதத்தை முதன்மைப்படுத்தியதோடு சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளின் தீர்வுகளை முன்மொழிந்து அதன் மூலமாக ஆட்சியிலும் அதிகார கட்டமைப்பிலும் அரச வடிவத்தின் மீதான பதிலீட்டுச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தி இருந்தார்கள். முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தை உடைப்பதற்கான செய்முறையென்று வர்க்கப் போராட்டத்தின் ஊடாக சோஸலிஸ்ட்டுகள் அல்லது மார்க்சிஸ்ட்டுகள் முன்வைத்திருந்தனர். அதனை நோக்கிய போக்கொன்றே சமத்துவம் சார்ந்து அல்லது சம உரிமை சார்ந்த புரிதலாக காணப்படுகிறது. இதனை நியதியாக கொள்வது என்பது இலங்கை தீவின் அரசியலில் தனித்துவத் தன்மையைத் தோற்றுவிக்கும். அதனைக் கைவிட்டுபோலியான புரிதலும் வியாக்கியானமும் கடந்த கால வழமையான மரபுக்குள் இலங்கை தீவை கொண்டு செல்கின்ற ஒரு துயரத்தையே மீளவும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இலங்கைத் தீவின் சமத்துவம் பற்றிய உரையாடல் அல்லது சமமான வாய்ப்பு பற்றிய உரையாடல் தேசிய இருப்புச் சார்ந்து அகரீதியான எழவேண்டியது.
வளங்களின் பகிர்வென்பது அரசியல் அதிகாரத்தினால் கட்டமைக்கப்பட வேண்டியது. அவை அரசியல் அதிகாரம் இல்லாத போது தேசியங்கள் தமக்கிடையிலான பாரபட்சத்தையும் வளப்பகிர்வில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளையும் கையாள முடியாத வங்குரோத்து நிலையை ஏற்படுத்தும். அதற்கான புரிதலையே மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றும் உணர்த்தி நிற்கின்றது
ஆகவே நிச்சயமாக இலங்கையின் இன முரண்பாட்டுக்கான தீர்வில் இருந்தே சம வாய்ப்புகளும் சம உரிமை தோற்றுவிக்கப்பட வேண்டும். அதனை ஒவ்வொரு அதிகார அலகுகளும் தமக்குள் ஏற்படுத்திக் கொள்வது என்பது அடிப்படையானது. மத்தியில் இருந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் உத்தரவாதப்படுத்த முடியும். ஒரு நீண்ட தேசிய இன பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதென்பது தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திலிருந்து கட்டி எழுப்பப்பட வேண்டியது. அதனை நோக்கிய புதிய வடிவமும் புதிய ஆட்சிகளும் அமைதல் வேண்டும். அதற்கான ஒரு புறச் சூழலை புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்துவது அவசியம் இன்றைய சூழலில் அதிகாரம் என்பது இனங்களின் அல்லது தேசியங்களின் இருப்புச் சான்று முன் வைக்கப்பட வேண்டிய விடயம் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
தலைவர்
அரசறிவியல்துறை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்