பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல….! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி,  சி.அ.யோதிலிங்கம்

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் முழுவடிவம் வரிமாறு

எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும் ஒன்றல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடங்களில் கூட வாக்குறுதிகளை அள்ளி வழங்கலாம். ஆளும் கட்சியாக வந்தபின் அதனை நடைமுறைப்படுத்துவதில் திணற வேண்டி வரும.; அனுர அரசாங்கத்திற்கும் அந்த நிலையே வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது முறைமை மாற்றம் என்பதையே பிரதானமான கோசமாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்தது. இன்று அந்தப் பாதையில் ஒரு அடியை கூட அதனால் முன்வைக்க முடியவில்லை. இதைவிட வரிக்குறைப்பு, ஊழல் ஒழிப்பு, விலைக் குறைப்பு போன்ற கோசங்களையும் முன்வைத்தது. முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும.; ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை அப்படியே ஏற்க மாட்டோம் எனக் கூறிவந்தது. இன்று ஒப்பந்தத்தில் ஒரு வரியைக் கூட மாற்றாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படப் போவதாக நாணய நிதியத்துக்கு உறுதி கூறியுள்ளது.
விமர்சனங்கள் வரும்போது மட்டும் இவ் ஒப்பந்தம் தாங்கள் கைச்சாத்திடவில்லை. முன்னைய அரசாங்கம் கைச்சாத்திட்டது எம்மால் அதனை மீற முடியாது என சாட்டுச் சொல்லப் பார்க்கின்றது. மீற முடியாது என்ற விடயம் முன்னரே தெரியாதா? அப்போது ஏன் மக்களுக்கு பொய் கூற வேண்டும் என்ற கேள்விகள் எல்லாம் இங்கு எழுகின்றன. தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் மேலும் தீவிரமடையலாம். எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. வரிக்குறைப்பு எதற்கும் சர்வதேச நாணய நிதியம் சம்மதம் தெரிவிக்கவில்லை என செய்திகள் வருகின்றன. மறுபக்கத்தில் நினைவு கூருதல் தொடர்பாக கைதுகள் எல்லாம் இடம்பெறுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறியவர்கள் தற்போது அச்சட்டத்தின் கீழேயே கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர். கொள்கை விளக்கவுரையில் இனவாதம், மதவாதம் என்பவற்றுக்கு இனிமேல் இடமில்லை என ஜனாதிபதி கூறினார.; மதவாதத்திற்கு இடமில்லை என்றால் பௌத்த மதத்திற்கு மட்டும் என பௌத்த சாசன அமைச்சு எவ்வாறு உருவாக முடியும்.
அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதன் கழுத்தில் கத்தி போல பொருளாதார நெருக்கடி, ஆட்சியியல் நெருக்கடி, பூகோள, புவிசார் அரசியல் நெருக்கடி, இனப் பிரச்சினை என நான்கு நெருக்கடிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு நெருக்கடிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும் பொருளாதார நெருக்கடியில் முக்கிய விடயம் சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை நிறைவேற்றுவதுதான.; 4ம் கட்ட பணவிடுவிப்பு கூட வரவு செலவுத் திட்டத்தில் வருமான வழிவகைகள,; செலவினக்குறைப்பு கடன் மறுசீரமைப்பு என்பவை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கின்றது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை ஆசியாவில் முதல் தடவையாக 16 அம்சங்களை கொண்ட ஆட்சியல் ஆய்வுத் திட்டத்தையும் சர்வதேச நாண நிதியம் முன் வைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் முதலாவது வருமானத்தை 12 வீதத்திலிருந்து 15 விதமாக அதிகரிக்க வேண்டும் என்பதாகும.; அரசாங்கத்தைப் பொறுத்தவரை உள்நாட்டு மட்டத்தில் வருமானத்தை தருபவையாக வரிவிதிப்புஇ அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் என்பனவே உள்ளன. வெளிநாட்டு வருமானமாக ஏற்றுமதி வருமானம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணம், சுற்றுலாத்துறை வருமானம் என்பதை உள்ளன.
சர்வதேச நாணய நிதியம் உள்நாட்டு வரிகளை அதிகரிக்கும்படி கூறியுள்ளது. நேர் வரி, நேரில் வரி இரண்டையும் அதிகரிக்கும்படி கேட்டுள்ளது. ஏற்கனவே நேரில் வரியாக வற் வரி போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இது போதுமானதல்ல. நேர் வரியையும் அதிகரிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளது. இதனால் சொத்துவரி போன்றவை அறிமுகப்படுத்தப்படலாம். வேறு புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். மக்கள் அனைவரும் வரி செலுத்துவது கட்டாயமாக்கப்படல் வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே வரிச் சுமையினால் மக்கள் அதிர்ப்தி நிலையில் உள்ளனர். இதன் காரணமாகத்தான் தாங்கள் ஆட்சிக்கு வரும் போது வரிகளைக் குறைப்போம் என அனுரா வாக்குறுதி வழங்கியிருந்தார். இன்று அந்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டுள்ளன.
இரண்டாவது வறுமையை 15 வீதமாகக் குறைக்க வேண்டும்  என்ற நிபந்தனையாகும.; உலக வங்கியின் அறிக்கைப்படி வறுமை தற்போது 26 வீதமாக உள்ளது. அதாவது மக்களில் 26 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். நாளொன்றுக்கு கொள்வனவு திறன் 3.65 டொலர் என்ற குறிகாட்டியே இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் சர்வதேச குறிகாட்டி 6.85 டொலராகும். இந்தக் குறிகாட்டியை பயன்படுத்தினால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் 67 வீதமாக இருப்பர். அரசாங்கத்திடம் வறுமை ஒழிப்புக்கு அஸ்வெசுமத் திட்டத்தை தவிர வேறு திட்டங்கள் பெரிதாக இல்லை. வறுமை ஒழிப்பு என்பது கல்வி, சுகாதாரம் என்பவற்றின் அபிவிருத்தியுடன் கிராமிய அபிவிருத்தி போன்ற விடயங்களுடனும் தொடர்பு பட்டது. தற்போது நடுத்தர வர்க்கத்திலிருந்த பலர் வறுமைக் கோட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மூன்றாவது நிபந்தனை வரவு செலவுத் திட்ட பற்றாக் குறையை குறைக்க வேண்டும் என்பதாகும். 2032ம் ஆண்டு 13 வீதமாக குறைக்கப்படல் வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பற்றாக்குறை 24 வீதமாக உள்ளது. கடன் நிறுத்தம் இல்லாதிருந்தால் இது 33 வீதமாக இருக்கும். அனுரா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை குறைக்க நியாயமான அளவு முயற்சிக்கப்படல் வேண்டும் என சர்வதேச நாணயம் எதிர்பார்க்கின்றது.
நான்காவது கடன் வழங்கல் ஆகும். 2027ம் ஆண்டிலிருந்து கடன்களை வழங்க வேண்டும். வருடம் தோறும் வழங்க வேண்டிய கடன் 5 மில்லியன் டொலர்கள் ஆகும். கடன் நிறுத்த காலத்தில் வழங்காத கடன்களும் நிலுவையில் இணையும் போது 2027ம் ஆண்டுக்கு பின்னர் வருடம் தோறும் வழங்க வேண்டிய கடன் 6 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கலாம். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் கடன் வழங்கியவர்கள் நிலுவையை தள்ளுபடி செய்ய இணங்க வேண்டும். ஆனால் இதுவரை எவருமே நிலுவையை தள்ளுபடி செய்ய இணங்கவில்லை.
ஐந்தாவது நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.   சிறீலங்கன் விமான சேவை, ரெலிகொம் போன்ற நிறுவனங்கள் இதற்குள் அடங்குகின்றன. மின்சார சேவையும் இதற்குள் கொண்டுவரப்படலாம். இவற்றை தனியார் மயமாக்குவது என்பது தேசிய மக்கள் சக்தி அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை அனுமதிக்க மாட்டோம் என்றே அனுரா கூறினார். ஆனால் தற்போது இதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். செலவினைக் கட்டுப்பாட்டிற்குள் இது அடங்குவதால் வரப்போகும் வரவு செலவுத் திட்டத்திலும் இதற்கான உறுதி மொழிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பவற்றிலும் கைவைக்கும் நிலை ஏற்படலாம். 1970 களைப் போல மருத்துவ மனைகளுக்கு முத்திரைகளுடன் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம். கோத்தபாயாவிற்கு கொரோனா செலவுச் சுமையாக வந்தது போல அனுராவுக்கு வெள்ள நெருக்கடி செலவுச் சுமையாக வந்துள்ளது. எதிர்பாரா செலவினங்கள் ஏற்படும் போது செலவினைக்கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது கடினமாக இருக்கும்.
வெளிநாட்டு வருமானங்களில் முதலாவது ஏற்றுமதி வருமானம் தான். அதிலும் முதலாவது இடத்தை தைத்த ஆடைகள் ஏற்றுமதி தான் கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுமே அதிகளவில் இவற்றை இறக்குமதி செய்கின்றன. இதற்கு அடுத்ததாகவே தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்கள் உள்ளன. ஏற்றுமதி வருமானத்தில் அமெரிக்கா 25 வீதப்பங்கை வகிக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகக் ஐரோப்பிய ஒன்றியம் 17 வீதத்தையும, ஆசிய நாடுகள் 12 வீதத்தையும், மத்திய கிழக்கு நாடுகள் 9 வீதத்தையும் வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருமானம் வெறுமனவே 7 வீதம் தான்.
ஏற்றுமதி வருமானத்திற்கும் இறக்குமதி செலவுக்குமிடையே பாரிய இடைவெளி இருக்கின்றது. இந்த வர்த்தகப் பற்றாக்குறை பாரிய சென்மதி நிலுவைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் மூலமும், சுற்றுலாத்துறை வருமானத்தின் மூலம் இப் பிரச்சினை சமாளிப்பு செய்யப்படுகின்றது. 2022ம் ஆண்டு ஏற்றுமதி வருமானம்  13.1 வீதமாக இருந்த அதேவேளை இறக்குமதிச் செலவு 18.3 வீதமாகவும் இருந்தது. இதன்படி வர்த்தகப் பற்றாக்குறை 5.2 வீதமாகும். இந்தப் பற்றாக் குறையை குறைக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. தைத்த ஆடைகள் ஏற்றுமதி வருமானத்தில் முதன்மை நிலையை வகித்தாலும் தேறிய வருமானத்தில் முதன்மை இடத்தை தேயிலையே வகிக்கின்றது. தைத்த ஆடைகளின் வருமானத்தில் ஒரு பகுதி வெளிநாடுகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை உற்பத்தி அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து கொண்டே வருகின்றது.
காலனித்துவ அடக்குமுறை பெருந்தோட்டங்களில் நிலவுவதனாலும,; போதியளவு ஊதியம் வழங்கப்படாமையினாலும்  பெருந்தோட்ட மக்கள் தோட்டங்களிலிருந்து வெளியேறுகின்றனர். மலையக ஆசிரியர் ஒருவர் பெருந்தோட்டம் என்பது ஒரு நரகம். நாங்கள் அனுபவித்த துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதற்காக தோட்டத்திலிருந்து வெளியேறினோம் என கூறினார். 200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் நிலமற்ற வீடற்ற சமூகமாகவே மலையக சமூகம் இருக்கின்றது. இந்த மக்களின் விலகலைத்  தடுக்க வேண்டும் என்றால் பெருந்தோட்டத்துறையில் மதிப்பு கூட்டப்பட வேண்டும். இதற்குள் பெருந்தேசியவாதஅரசியல் வேறு அங்கு கோலோச்சுகின்றது. சிறு தோட்டச் செய்கையாளர்கள் அங்கு முதன்மை நிலையை வகிக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் உலகமயமாக்கலுக்கு எதிராக தேசியவாதம்  வளர்ச்சியடைந்து வருகின்றது. அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்பின் வெற்றி அமெரிக்க தேசியவாதத்தின் வெற்றியே! “அமெரிக்கா முதலில்” என்ற கோசத்துடனேயே ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட்டார் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.
உலகின் பல நாடுகளில் நடைபெறும் உற்பத்தி நடவடிக்கைகளினால் தான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகின்றது என்பது அதிபரின் வாதம். வர்த்தகப் பற்றாக்குறையும் அமெரிக்காவிடம் உண்டு. 0.6 ரில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை அங்கு நிலவுகின்றது. இதனை ஈடு செய்வதற்கு இறக்குமதி தீர்வைகளை அதிகரிக்கப் போவதாக அவர் கூறியிருக்கின்றார். இவ்வாறு தீர்வைகள் அதிகரித்தால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வலுவாக வீழ்ச்சியடையும் இது சென்மதி நிலுவைப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதே நிலைதான். வருமானத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, வேலையில்லா திண்டாட்டம், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமின்மை, குடியேற்றவாசிகள் உள்ளூர் வேலை வாய்ப்புகளை பறித்தல் என்பவற்றில் அங்கும் தேசியவாதம் தலை தூக்குகின்றது. இடதுசாரிகள் – வலதுசாரிகள் இணைந்தும் தேசிய வாதத்தின் எழுச்சியைத் தடுக்க முடியவில்லை. எனவே அங்கும் இறக்குமதி தீர்வைகள் அதிகரிக்கப்படலாம். இது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை பாதிப்பதோடு புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தையும் பாதிக்கும்.
எனவே அரசாங்கம் இந்த விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
ஆறாவது ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும். இன்று அரச துறைகள் அனைத்திலுமே ஊழல் மலிந்து காணப்படுகின்றது. அமைச்சர்கள் தொடக்கம் அதிகாரிகள் ஊடாக  சிற்றூழியர் வரை இதற்கு விதிவிலக்காக எவருமில்லை. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சட்டரீதியான ஆவணங்களுடன் வெளிநாடு செல்லும் தமிழ் இளைஞர்களிடம் குடிவரவு குடியகல்வு பகுதியினர் பலவந்தமாக பணம் பறிக்கும் நிலையும் காணப்படுகின்றது. பயணத்திற்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதற்காக தமிழ் இளைஞர்கள் பணத்தை கொடுத்து விட்டு செல்லும் நிலையும் உள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக  முன்னாள் அமைச்சர் விசாரணையில் இருக்கின்றார். பல புள்ளிகள் இன்னமும் வெளிப்படாதிருக்கின்றனர். புள்ளிகளுக்கு பிரச்சினை வரும் என்பதற்காக ஊழல் விசாரணையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ராஜபக்சாக்கள் மீது நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்க வேண்டாம் என சீனா அழுத்தம் கொடுத்ததாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன. எனவே ஊழலை ஒழிப்பது என்பது அரசாங்கத்திற்கு இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
எனவே பொருளாதார நெருக்கடி என்பது கூரிய கத்தி போல அரசாங்கத்தின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விவகாரத்தை தீர்ப்பது என்பது அனுரா அரசாங்கத்திற்கு  இலகுவாகக் இருக்கப்; போவதில்லை. அரசியல் பொருளாதாரம் இலங்கைக்கு சார்பாக இல்லை என்றே கூறலாம்.
அடுத்த வாரம் ஆட்சியில் நெருக்கடி, பூகோள, புவிசார் அரசியல் நெருக்கடியை பார்ப்போம.;

Recommended For You

About the Author: Editor Elukainews