மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், அதிபர், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டார்களா என்று அரசாங்கத்தை கேட்க விளைகின்றோம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரஜித கொடித்துவக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது. விசேடமாக எதிர்வரும் 21ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்டளவில் பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாங்கத்திடம் ஒன்றை நாம் கேட்கவிளைகின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்கு ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாமல், பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானித்திருந்தால் இந்த பிரச்சினை மீண்டும் இருந்த இடத்துக்கே செல்லும் என்பதை நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்.
சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக அரசாங்கமானது பயிற்சிபெற்ற ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்தால் அது நாட்டின் கல்வி முறை இல்லை என்பதே எமது கருத்து.
அதேபோன்று அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காது அதற்குப் பதிலாக சகல விடயங்களிலும் இராணுவத்தினரை உள்ளீர்ப்பதை போன்று ஆசிரியர்கள் இல்லாவிட்டால் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை அழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்தால் அது அரச நிர்வாகம் இல்லை என்றே கூற வேண்டும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்கும்போது பிரதேச அரசியல்வாதிகளை அழைத்துவந்து பாடசாலைகளுக்கு அருகில், தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளன. பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கு முயற்சிக்காது பிரச்சினைகளை சரியான இனங்கண்டு அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.