அநுரா-மோடி இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் இலங்கைத் தீவை இந்தியாவின் இன்னோர் மாநிலமாக்குகிறதா? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

பஇலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய உறவின் முக்கியமான திருப்பமாக அவரது இந்திய விஜயம் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இலங்கை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற சந்தர்ப்பத்தில் எத்தகைய விழா முன்னெடுப்புகளோ சம்பிரதாயங்களோ இன்றி பதவிப்பிரமாணத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஆனால் இந்தியா இலங்கை ஜனாதிபதியின் வருகையை பெரும் கொண்டாட்டமாகவும் இலங்கை வரலாற்றிலே எந்த ஜனாதிபதிகளுக்கும் இல்லாத அளவுக்கு அநுர குமாரதுசநாயக்காவை வரவேற்று கௌவுரவித்தமை கவனிக்கத்தக்கது. இரு தலைவர்களும் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய செய்தியாளர் மகாநாடும் எட்டப்பட்ட உடன்படிக்கைகளும் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய முக்கியத்துவத்தின் விளைவுகளைத் தேடுவதாக அமைய உள்ளது.

இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாரிய பொருளாதார ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தம் விதத்தில் இரு தலைவர்களும் தமது அமைச்சர்களின் ஒப்புதலோடு உடன்பாடுகளையும் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அத்தகைய உடன்பாடுகளில் முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியது. குறிப்பாக இந்தியாவிலிருந்து பெற்றோலிம் மற்றும் எரிவாயுவை கடலின் ஊடாக குழாய் மூலம் பரிமாற்றம் (Oil Pipeline) செய்கின்ற திட்டத்தையும் தொலை தொடர்புகள் மற்றும் செய்தி பரிவர்த்தனைகளை புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக் கொள்ளும் கடல் வழியாக கேபிள் (Cable Line) தொடர்பாடலையும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தை டிஜிற்றல் (Digital Line) மூலமும் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை வளப்படுத்துவது என உடன்பாடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறே மீன்பிடி சுகாதாரம் போக்குவரத்து வர்த்தகம் என்பனவும் இந்திய இலங்கை உறவின் நெருக்கத்தினை ஏற்படுத்தும் விதத்தில் உடன்படுவது என தீர்மானமாக உள்ளது. செய்தியாளர் மத்தியில் இந்திய பிரதமர் மாகாணசபை தேர்தலையும் அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கத்தையும் வலியுறுத்தியதோடு மீனவப் பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களுக்கு இடையே உரையாடல் ஏற்பட்டதோடு அதன் தொடர்ச்சியை பேணுவது என்றும் இலங்கையின் நிர்வாகச் சேவையினர் இந்தியாவில் பயிற்சி வழங்குவதெனவும் வடக்கில் அடுத்து வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான உயர்கல்வியை வழங்குவதற்கு அனுமதியளிப்பதோடு புலமைப்பரிசில் திட்டத்தினையும் முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் அதீதமான முக்கியத்துவத்தை இரு நாடுகளின் உறவுகளின் ஏற்படுத்தியதோடு இலங்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் எத்தகைய நடவடிக்கையின் மேற்கொள்வதற்கு ஒத்துழைக்காத எனவும் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்துவதென்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையை இந்தியாவில் நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஏற்படுத்துவதாக தெரிகின்றது. அத்தகைய ஒத்துழைப்பின் விளைவுகளை விளங்கிக் கொள்வது அவசியம்.

முதலாவது இலங்கை ஜனாதிபதியின் இந்திய தரப்பினால் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளார். இலங்கை இந்திய உறவில் வாய்ப்பான தலைவராக அநுரா குமாரதிசநாயகா அடையாளம் கண்டது போல் அவர்களது நகர்வுகள் அமைந்திருந்தன. இதனை ‘Embracing Diplomacy’ என மேற்குலக இராஜதந்திரிகள் மதிப்பீடு செய்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை அணுகுகின்ற முறைமையினை அவ்வாறு கருதுகின்றனர். அத்தகைய ராஜதந்திரத்தை மோடி ஆசிய தலைவர்களோடும் நெருக்கமான மேற்குலக தலைவர்களோடும் பின்பற்றி வருவதனை கண்டு கொள்ள முடிகின்றது. அதனையே இலங்கை ஜனாதிபதியின் முன்னும் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி புத்தகாயாவுக்குச் சென்ற இலங்கையின் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பது மதரீதியான அணுகுமுறைக்குள் இடதுசாரி தலைவர் ஒருவர் நுழைந்ததையே படம்பிடித்துக் காட்டுவது போல் அமைந்தது. அத்தகைய வரவேற்பை ஆசுவாசிக்கும் தலைவராகவே இலங்கையின் இடதுசாரி ஜனாதிபதி காணப்பட்டார். அது மட்டுமன்றி அவர் ஆழமான பௌத்த மத எண்ணத்தை வெளிப்படுத்தியதையும் கண்டுகொள்ள முடிந்தது. இங்கும் இடதும் மதமும் ஒன்று கலந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது.

இரண்டாவது இலங்கை ஜனாதிபதியோடு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட குழாய் அரசியல் (Pipeline Politics) கேபில் அரசியல் (Cable Politics) டிஜிட்டல் அரசியல் (Digital Politics)என்பன இலங்கை தீவை இந்தியாவில் ஒரு மாநிலமாக தரிசிப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும் தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது போல் தெரிகிறது. இருநாட்டுக்குமான தொலை தொடர்பு எண்ணைப் பரிமாற்றம் மற்றும் கேபிள் மூலமான தகவல் பரிமாற்றம் என்பன இலங்கை தீவை இந்தியாவின் இன்னொரு மாநிலமாக அடையாளப்படுத்துவது போன்று காணக்கூடியதாக இருந்தது. அனைத்துமே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிப்பது இலங்கை இந்தியா உறவில் முழுமையாக தங்கியிருக்கும் சூழலைத் தோற்றுவிக்க வாய்ப்பு உண்டு. அது இலங்கைத் தீவின் பொருளாதார நலனுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்ல அவசியமானதும். விமான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து வீதி புணரமைப்பு என்ற அனைத்தும் இந்திய தளத்திலிருந்து பரிமாற்றப்படுகின்ற உடன்பாடுகள் காட்டப்பட்டுள்ளன. கடலுக்குடாக குழாய் மூலமும் கேபிள் மூலமும் மற்றும் டிஜிட்டல் மூலமும் பிணைப்பு ஏற்படுத்துவது என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்களை போன்று இலங்கைத் தீவை பிணைப்பதாகவே தெரிகிறது. 1940 களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தையே நினைவு கொள்ளச் செய்கிறது.

மூன்றாவது இலங்கைத் தமிழர்களின் விடயம் பொறுத்து இரு தலைவர்களும் அதிகமாக உரையாடாததும் மாகாண சபை தேர்தலோடும் வடக்கு மாணவர்களுக்கு உயர்கல்வியுடனும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் விடயம் சுருங்கியுள்ளது. அதற்கான அடிப்படை காரணம் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் ஏற்படுத்திய மிக மோசமான அணுகுமுறைகளேயாகும். இறந்து போன, தோற்றுப் போன, மற்றும் வெற்றி பெற்ற அனைத்து தமிழ அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழருடைய அரசியலை பேசா பொருளாக்கியுள்ளனர். இதில் சிவில் சமூகத்தினருக்கும் அதிகமான பங்குண்டு. இது இந்தியாவோடும் தமிழகத்தோடும் எத்தகைய ராஜதந்திர உத்தியும் இன்றி நடந்து கொண்டதன் விளைவேயாகும். தந்திரோபாய ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் எத்தகைய உறவை இந்தியாவுடன் பின்பற்ற வேண்டும் என்ற எந்த எடுகோளுமின்றி செயல்பட்டதும் ஈழத்தமிழர் அரசியலை தனித்துவத்தோடு இந்தியா அணுக முடியாத அளவுக்கு செயல்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவுகளே இன்றைய சூழலுக்கான அடிப்படை காரணமாகும். ஆனால் இதனை கடந்து இந்த சமுத்திரத்தில் ஈழத் தமிழர்களுடைய அரசியலைப் பற்றிய முழமையான புரிதலின்றி இந்தியா செயல்படுவதனை இந்த சந்திப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் அநுராவை வரவேற்றதை தவிர வேறு எதனையும் தமிழர்களுக்கானதாக கண்டு கொள்ள முடியவில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இருக்கும் அரசாங்கத்தை ஈழத்தமிழர் சார்ப்புக்குள் உட்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை இந்தியா தனக்கேற்ற வகையிலும் தனது நலனுக்கு உட்பட்ட விதத்தில் கையாண்டு இருக்கிறது. ஈழத்தமிழர் அரசியலில் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பான களத்தை இந்தியா தனக்கான மாற்றியுள்ளது.

எனவே இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகம் கொண்டுள்ளார் என்பது தென்படுகிறது. ஏறக்குறைய இந்தியாவின் பிடிக்குள் இலங்கை ஜனாதிபதி அகப்பட்டது போன்று அவரது உடல் மொழியும் உடன்பாடுகளும் காணப்படுகின்றன. ஆனால் தென் இலங்கைத் தலைவர்களின் ராஜதந்திர உத்திகளால் இந்தியத் தலைவர்கள் அதிகம் கையாளப்பட்டுள்ளனர். அதாவது இந்தியாவிடம் அடிமைப்படுவது போன்று நமது நலன்களையும் இலாபங்களையும் அடைந்து கொள்வதில் கவனம் கொள்ளுகின்ற போக்கொன்றை கடந்த காலங்களில் உணர முடிந்தது. ஆனால் அநுரா அத்தகைய எல்லைக்குள் இல்லாதவராகவே காணப்படுகின்றனர். அவரது உடல் மொழியும் வழிபாடுகளும் அதனையே உணர்த்துகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)

Post Views: 11

Recommended For You

About the Author: Editor Elukainews