
சாவகச்சேரி – மீசாலை பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் (27122024) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மீசாலை கிழக்கு மற்றும் மீசாலை மேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக ஒருவர் வீடுகளுக்குள் புகுவதும், மக்கள் துரத்தும் போது ஓடுவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி, மீசாலை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தனியாக வசித்து வந்த வீட்டில் ஒரு சங்கிலி, ஒரு சோடி காப்பு மற்றும் இரண்டு மோதிரங்கள் என எட்டுப் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை டொலர் என்பன களவாடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் மயூரன், கான்ஸ்டபிளான நிதர்சன் மற்றும் நிரு ஆகிய மூன்று பொலிஸார் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மரம் வெட்டும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டவேளை அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நகைகளை கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
2 Attachments • Scanned by Gmail